ஸ்ரீநகர்,
காஷ்மீரில் கண்ணிவெடியில் சிக்கி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா கட் செக்டார் சர்வதேச எல்லை வழியாக 4 பயங்கரவாதிகள் இன்று இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர். அதேவேளை, இருநாட்டு எல்லையில் பாதுகாப்புப்படையினர் பல பகுதிகளில் கண்ணிவெடிகளை புதைத்து வைத்துள்ளனர்.
4 பயங்கரவாதிகளும் பாகிஸ்தானில் இருந்து கிருஷ்ணா கட் செக்டார் வழியாக காஷ்மீருக்குள் நுழைய முயன்றனர். அப்போது, பாதுகாப்புப்படையினர் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் பயங்கரவாதிகள் மிதித்துள்ளனர். இதனால் கண்ணிவெடி வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 4 பயங்கரவாதிகளும் உடல் சிதரி உயிரிழந்தனர்.
உயிரிழந்த பயங்கரவாதிகள் அனைவரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த முகமது இஸ்திக், முகமது பைசன் (லஷ்கர் இ தொய்பா முக்கிய தளபதி), முகமது வாகஸ், முகமது ஆசிப் ஆகிய 4 என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கண்ணிவெடி வெடித்த இடத்தில் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.