தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட 4 பேர் மாநிலங்களவைக்கு தேர்வு

வேட்புமனு பரிசீலனையின்போது சுயேச்சை வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர்கள் இரண்ணா கடாடி மற்றும் நாராயண கோரகப்பா, காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ஜே.டி.(எஸ்) மாநிலங்களவை உறுப்பினர் தேவகவுடா ஆகியோரின் பதவிக்காலம் ஜூன் 25-ந்தேதி முடிவடைவதால், 4 மாநிலங்களவை இடங்களை நிரப்புவதற்காக தேர்தல் வரும் 18-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த திங்கள்கிழமை நிறைவடைந்த நிலையில், மொத்தம் 5 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இருப்பினும் வேட்புமனு பரிசீலனையின்போது சுயேச்சை வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது. மேலும், வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் இன்றோடு நிறைவடைகிறது.

இந்த நிலையில், 4 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் போட்டியிட இதுவரை 4 பேர் மட்டுமே வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதால், அவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். இதன்படி காங்கிரஸ் கட்சியில் இருந்து மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட 3 பேர் மற்றும் பா.ஜ.க. வேட்பாளர் ஒருவர் என மொத்தம் 4 பேர் மாநிலங்களவைக்கு தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.