தேசிய செய்திகள்

ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதி பதவியை அலங்கரிக்கும் 4 பெண்கள்: புதிய சாதனை

இந்தியாவில் உள்ள ஐகோர்ட்டுகளில் மொத்தம் 781 பேர் நீதிபதிகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 116 பேர் பெண் நீதிபதிகள் ஆவர்.

புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள ஐகோர்ட்டுகளில் 4 பெண் நீதிபதிகள், ஒரே நேரத்தில் தலைமை நீதிபதி பதவியை அலங்கரித்து வருகின்றனர். இந்திய நீதித்துறை வரலாற்றில் இது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

ஐகோர்ட்டு நீதிபதிகள்:

இந்தியாவில் உள்ள ஐகோர்ட்டுகளில் மொத்தம் 781 பேர் நீதிபதிகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 116 பேர் பெண் நீதிபதிகள் ஆவர். இது, ஐகோர்ட்டு நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 14.85 சதவீதமாகும். மொத்தம் 116 பெண் நீதிபதிகள் ஐகோர்ட்டு நீதிபதிகளாக இருந்து வரும் அதே வேளையில் நீதித்துறை வரலாற்றில் முதன்முறையாக பீகார் (பாட்னா), குஜராத், மேகாலயா மற்றும் ஆந்திர மாநில ஐகோர்ட்டுகளில் 4 பெண் நீதிபதிகள் தற்போது தலைமை நீதிபதிகளாக பணியாற்றி வருகின்றனர். இது நீதித்துறை வரலாற்றில் ஒரு முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் 4 ஐகோர்ட்டுகளுக்கு பெண் தலைமை நீதிபதிகள்:

சிக்கிம் ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்து வந்த மீனாட்சி மதன்ராய். கடந்த 5-ந்தேதி பாட்னா ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து இந்த சாதனை எட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள 4 ஐகோர்ட்டுகளுக்கு ஒரே நேரத்தில் பெண் தலைமை நீதிபதிகள் தலைமை தாங்கும் சூழல் உருவாகி இருக்கிறது. பாட்னா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மீனாட்சி மதன்ராயுடன், குஜராத் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக சுனிதா அகர்வாலும், மேகாலயா ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக ரேவதி மொஹிதே தேரேவும் மற்றும் ஆந்திரபிரதேச ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக லிசா கில்லும் தற்போது தலைமை நீதிபதிகளாக இருந்து வருகின்றனர். குஜராத் ஐகோர்ட்டில் இருந்து பதவி உயர்வு பெற்ற நீதிபதி சுனிதா அகர்வால், அங்கேயே தலைமை நீதிபதியாக 2023-ம் ஆண்டு ஜூலை 23 முதல் பணியாற்றி வருகிறார். மும்பை ஐகோர்ட்டின் நீதிபதியாக இருந்த ரேவதி மோஹிதே தேரே. கடந்த ஜனவரி 10-ந்தேதி அன்று மேகாலயா ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டில் இருந்து பதவி உயர்வு பெற்ற நீதிபதி லிசா கில், கடந்த ஏப்ரல் 25-ந்தேதி அன்று ஆந்திரபிரதேச ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

இதுவே முதல்முறை:

இந்தியாவில் ஒரே நேரத்தில் 4 பெண்கள் ஐகோர்ட்டின் தலைமை பொறுப்பில் இருந்த நிகழ்வு இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு இருந்த போதிலும் ஒரே நேரத்தில் 4 பெண் நீதிபதிகள் முழுநேர தலைமை நீதிபதிகளாக பணியில் இருப்பது இதுவே முதல் முறையாகும். அதாவது, 2018-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி இந்திரா பானர்ஜியும், மும்பை ஐகோர்ட்டில் நீதிபதி மஞ்சுளா செல்லூரும், டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி ரோகிணியும் தலைமை நீதிபதிகளாக பணியாற்றி வந்த நிலையில் பெண் நீதிபதியான நிஷிதா நிர்மல் மத்ரே மட்டும் கொல்கத்தா ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார். ஆனால், தற்போது பணியில் இருக்கும் 4 பெண் நீதிபதிகளும் முழுநேர தலைமை நீதிபதியாக இருப்பதன் மூலம் முந்தைய அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

தமிழக நீதிபதி:

இதுவரை 21 பெண் நீதிபதிகள், தலைமை நீதிபதியாக இந்தியாவில் உள்ள பல்வேறு ஐகோர்ட்டுகளில் பணியாற்றி உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த பெண் நீதிபதி ஆர்.பானுமதி, 2013-ம் ஆண்டு ஜார்கண்ட் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய நிலையில் அவர், பதவி உயர்வு மூலம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.