புதுடெல்லி,
பிரதமர் மோடி விமான போக்குவரத்து துறை சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் டெல்லியில் இருந்து காணொலி காட்சி வழியே கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் விமான பயணம் எளிதில் அணுக கூடிய ஒன்றாக மாற்றுவதே எங்கள் நோக்கம்.
அதனால்தான் நாங்கள் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை விமான நிலையங்களுடன் இணைத்து உள்ளோம். இந்தியாவில், விமான பயணம் அனைவரையும் உள்ளடக்கிய ஒன்றாக மாறி வருகிறது என்று கூறினார்.
அவர் தொடர்ந்து பேசும்போது, இந்தியாவில் 2014-ம் ஆண்டில், 70 விமான நிலையங்கள் இருந்தன. ஆனால் இன்று, அந்த எண்ணிக்கை 160-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களாக அதிகரித்துள்ளது.
நாட்டில் 100-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை நாங்கள் செயல்படுத்தியுள்ளதுடன், நமது மக்களுக்கு மலிவு விலையில் விமான திட்டங்களையும் தொடங்கினோம். 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.
இது மிக பெரிய நெட்வொர்க்காக இருக்கும் என பேசினார். உலகளாவிய தெற்கு பகுதியை உலகின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முதன்மை விமான மையம் என்ற அடிப்படையில் இந்தியா உருமாறி வருகிறது என்றும் அப்போது அவர் கூறினார்.
விமான பாகங்களை உற்பத்தி செய்யும் ஒரு முக்கிய நாடாகவும் உள்ளதுடன், நிலையான விமான எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடாக மாறுவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உலகை வழிநடத்தவும் இந்தியா தயாராகி வருகிறது என அப்போது அவர் குறிப்பிட்டார்.