பெங்களூரு,
பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் நடைபெற்ற கைதிகளுக்கான சிறப்பு யோகா நிகழ்ச்சியில், சுமார் 4,000 சிறைக் கைதிகள் பங்கேற்று யோகா பயிற்சி செய்தனர்.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடியின் பரிந்துரையைத் தொடர்ந்து ஐ.நா. சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, ‘சர்வதேச யோகா தினம்’ ஆண்டுதோறும் ஜூன் 21-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி 12-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு யோகா தினத்தின் கருப்பொருள், ‘ஆரோக்கியமான முதுமைக்கான யோகா’ (Yoga for Healthy Ageing) என்பதாகும். இது, அனைத்து வயதினரும் சுறுசுறுப்பாகவும், சுதந்திரமாகவும், உற்சாகத்துடனும் இருப்பதில் யோகாவின் பங்களிப்பை எடுத்துக்காட்டுகிறது. சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் மிகப்பெரிய அளவில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அந்த வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், கைதிகளுக்கான சிறப்பு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 4,000 சிறைக் கைதிகள் பங்கேற்று யோகா பயிற்சி செய்தனர். கைதிகளின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் வகையில், யோகா, தியானம் உள்ளிட்ட உடல்நலத்தை மேம்படுத்தும் பயிற்சிகள் சிறையில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக சிறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.