தேசிய செய்திகள்

ஒரே நாளில் 426 திருமணங்கள்... குருவாயூரில் பக்தர்களுக்கு முக்கிய கட்டுப்பாடு!

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கோவிலுக்குள் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி கிடையாது.

திருச்சூர்,

குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் நாளை மறுநாள் 426 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறுகிறது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், கோவிலுக்குள் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி இல்லை என்று உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

426 ஜோடிகளுக்கு திருமணம்

கேரளம் மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் கிருஷ்ணர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் மற்ற மாதங்களை விட, ஆவணி மாதம் முகூர்த்த நாட்களில் அதிக எண்ணிக்கையில் திருமணம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) 426 ஜோடிகளுக்கு திருமணம், வருகிற 30-ந் தேதி 338 ஜோடிகளுக்கு திருமணம், வருகிற செப்டம்பர் 13-ந் தேதி 320 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற இதுவரை முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

எனவே, இந்த திருமண நிகழ்ச்சிகளை தடை இன்றி நடத்தவும், அதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேவையான வசதிகளை செய்யவும். பக்தர்களின் தரிசனம் தடைபடாமல் இருக்கவும் போதிய முன்னேற்பாடுகளை செய்வது குறித்து உயர்மட்ட குழு கூட்டம் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கோவில் தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

கூட்டத்தில் திருச்சூர் மாவட்ட கலெக்டர் சிவ சுரேந்திரன், குருவாயூர் தேவசம்போர்டு ஆட்சி குழு உறுப்பினர்கள் மனோஜ், ஷினிஜா, போலீஸ் துணை கமிஷனர் சுரேந்திரன் மங்காடு, இன்ஸ்பெக்டர் வினோத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அதிக திருமணம் நடைபெறும் மேற்கண்ட 3 நாட்களில் திருமணம் எளிதாகவும், எந்தவித குழப்பமும் இன்றி நடைபெற பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், போலீசார் உதவியுடன் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் கோவில் உள்பகுதி. வெளிப்பகுதி. சுற்றுப்புற பகுதிகளில் செய்யப்படும். 3 நாட்களிலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் திருமணங்களை நடத்தி முடிக்க, அதிகாலை 4 மணி முதல் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் நடைபெற ஏதுவாக, 6 மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாளை மறுநாள், வருகிற 30-ந் தேதி, செப்டம்பர் 13-ந் தேதி ஆகிய 3 நாட்கள் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்ட உடன். திருமண நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

அங்கப்பிரதட்சணம் செய்ய தடை

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கோவிலுக்குள் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி கிடையாது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதோடு. கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும். பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.