தேசிய செய்திகள்

5 நாள் சுற்றுப்பயணம்: ஐக்கிய அமீரகம் புறப்பட்டார் பிரதமர் மோடி

நார்வேவில் 3-வது இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி மே 15 முதல் 20 ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு முக்கிய வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

முதலில் ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் அவர், அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் ஸயத் அல் நயானை சந்திக்கிறார். இதைத்தொடர்ந்து நெதர்லாந்து, ஸ்வீடன் செல்லும் அவர், அந்நாட்டுப் பிரதமர்களை சந்திக்க உள்ளார்.

அதன் பின்னர் நார்வே செல்லும் அவர், 3-ஆவது இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். அந்நாட்டுக்கு 43 ஆண்டுகளுக்குப் பின்னர் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து அவர் இத்தாலி செல்கிறார்.

அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக மேற்காசிய நாடுகளில் பதற்றம் நிலவி வரும் சூழலில், பிரதமர் மோடியின் பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தின் போது ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.