விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணி 
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதி விபத்து: 5 கூலித் தொழிலாளர்கள் பலி

ஹைதராபாத்தில் இருந்து கர்நாடகா நோக்கி அதிவேகமாகச் சென்ற டேங்கர் லாரி, எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது நேருக்கு நேர் பலமாக மோதியது.

ஹைதராபாத்,

தெலுங்கானா மாநிலம் சாத்வார் கிராமப் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை 65-இல் அதிவேகமாக வந்த டேங்கர் லாரி ஒன்று, பயணிகள் சென்ற ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியதில், ஆட்டோவில் பயணம் செய்த 5 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து

தெலுங்கானா மாநிலத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவின் பிதார் மாவட்டம் ராஜகிரி பகுதியைச் சேர்ந்த 12 விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நேற்று இரவு (செவ்வாய்க்கிழமை) தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் ஜாகீராபாத் நோக்கி ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர்.

சாத்வார் கிராமத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ வளைவில் திரும்ப முயன்றது. அப்போது ஐதராபாத்தில் இருந்து கர்நாடகா நோக்கி அதிவேகமாகச் சென்ற டேங்கர் லாரி, எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது நேருக்கு நேர் பலமாக மோதியது.

உயிரிழப்பு

இந்த கோர விபத்தில் ஆட்டோவில் இருந்த ரேகா (வயது 24), ஸ்ரீதேவி (வயது 28), கவிதா (வயது 34), ரேஷ்மா (வயது 26), மற்றும் ஆட்டோ ஓட்டுநர் தேவதாஸ் (வயது 45) என 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.

மீட்புப் பணிகள்

விபத்து குறித்து தகவல் அறிந்த ஜாகீராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். படுகாயமடைந்த 7 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஜாகீராபாத் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிறகு, உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.