தேசிய செய்திகள்

5 மாநில தேர்தல்; தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட தடை

தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

புதுடெல்லி

நாட்டில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ளது. அதனுடன் சேர்த்து, 6 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், கேரளா மற்றும் அசாம் ஆகிய இரு மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும்.

மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று தமிழகத்திற்கு ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும். தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட செய்தியில், 5 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 9-ந்தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29-ந்தேதி மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை மேற்கொள்ளவோ அல்லது அவற்றை வெளியிடவோ கூடாது என்று அறிவித்து உள்ளது.

இந்த காலகட்டத்தில் கருத்து கணிப்புகளை நடத்துவது அல்லது அவற்றை வெளியிடுவது என்பது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951-ன் 126-ஏ பிரிவை மீறுவது ஆகும். இதற்கு, 2 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என்றும் எச்சரித்து உள்ளது.