தேசிய செய்திகள்

உத்தவ் சிவசேனா கட்சி எம்பிக்களை விலைக்கு வாங்க ரூ.50 கோடி பேரம்-சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

மேற்கு வங்காளத்தில் தேர்தல் தோல்விக்குப் பிறகு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. தற்போது மராட்டிய மாநிலத்தில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி 2-வது முறையாக பிளவுபடும் நிலையில் உள்ளது.

மும்பை,

மராட்டிய முதல்-மந்திரியாக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அவரது ஆட்சியைக் கவிழ்க்கும் வகையில் ஏக்நாத் ஷிண்டே தனி அணியாகப் பிரிந்தார்.அவர் பா.ஜ.க. உதவியுடன் 2022-ல் முதல்-மந்திரியானார். இதனால் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்தது. 2024 தேர்தலில் பா.ஜ.க.-ஏக்நாத் ஷிண்டே கூட்டணி வெற்றி பெற்றது. ஷிண்டே தற்போது துணை முதல்-மந்திரியாக இருக்கிறார்.இதற்கிடையே உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்தக் கட்சியில் 6 மக்களவை எம்.பி.க்களும், 20 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

ரூ.50 கோடி பேரம்

இந்த நிலையில் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் 6 மக்களவை எம்.பி.க்களை விலைக்கு வாங்க ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் மேல்சபை எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-எங்கள் கட்சியைச் சேர்ந்த 6 எம்.பி.க்களுக்கு ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டுள்ளது. அதில் ரூ.15 கோடி முன்பணமாக வழங்கப்பட்டுள்ளது. எம்.பி.க்களை டெல்லிக்கு அழைத்துச் செல்ல தனி விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மராட்டிய மாநிலத்தில் நான்டெட், புனே உள்ளிட்ட 3 இடங்களுக்கு தனி விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த தகவலை முக்கிய நபர் ஒருவர் நள்ளிரவில் என்னிடம் தெரிவித்தார்.

ராஜினாமா செய்ய வேண்டும்

2022-ல் நடந்ததைப் போல் மீண்டும் கட்சி பிளவுபட்டால் எங்கள் எம்.பி.க்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். யாரேனும் வெளியேற விரும்பினால் அவர்கள் முதலில் ராஜினாமா செய்ய வேண்டும். அவர்கள் எங்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு, அவர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுத்ததால்தான் பாராளுமன்றத்திற்குச் சென்றுள்ளனர்.தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை விலைக்கு வாங்கி உடைக்கும் நடைமுறை ஜனநாயகத்திற்கும், அரசியல் அமைப்பிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது.நாங்கள் கொறடா உத்தரவைப் பிறப்பித்து பாராளுமன்றக் குழு எம்.பி.க்கள் கூட்டத்தை நாளை கூட்டியுள்ளோம். இதில் எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் கடிதம் எழுதியுள்ளோம்.இவ்வாறு சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.பேட்டியின்போது அவரது கட்சியைச் சேர்ந்த அரவிந்த் சாவந்த், அனில் தேசாய், ராஜபாவ் வாஜே ஆகிய 3 எம்.பி.க்கள் மட்டுமே உடன் இருந்தனர்.

ஏக்நாத் ஷிண்டேவுடன் தொடர்பு

இதற்கிடையே அதிருப்தி எம்.பி.க்கள் 6 பேரும் ஏக்நாத் ஷிண்டேவுடன் தொடர்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.சஞ்சய் தினா பாட்டீல், சஞ்சய் தேஷ்முக், நாகேஷ் பாட்டீல் அஷ்டிகர், ஓம்ராஜே நிம்பால்கர், பாவ்சாகேப் வாக் சவுரே, சஞ்சய் ஜாதவ் ஆகிய 6 பேர் உத்தவ் தாக்கரே மீது அதிருப்தியில் உள்ள எம்.பி.க்கள் ஆவார்கள்.

சபாநாயகருடன் சந்திப்பு

உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியைச் சேர்ந்த அரவிந்த் சாவந்த், அனில் தேசாய் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று சந்தித்தனர். பின்னர் அவர்கள் கடிதம் ஒன்றை அளித்தனர்.இதுகுறித்து அனில் தேசாய் எம்.பி. கூறும்போது, “எங்கள் சிறப்பு அனுமதி மனு மீது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்திருந்தால் இந்தப் பிரச்சினைகள் எதுவும் எழுந்திருக்காது. இது துரதிர்ஷ்டவசமானது” என்றார்.

நடவடிக்கை

சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தது குறித்து அரவிந்த் சாவந்த் கூறும்போது, “இந்த விஷயங்கள் அரசியல் அமைப்பிலும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலும் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் அரசியல் கட்சிகளுக்கு பாதுகாப்பை அளிக்கின்றன. விதிமுறைகள் மீறப்பட்டால் தேர்தல் கமிஷனும், சுப்ரீம் கோர்ட்டும் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.சபாநாயகரை சந்தித்த பிறகு சிவசேனா மேல்சபை எம்.பி. சஞ்சய் ராவத் கூறும்போது, “சபாநாயகர் எங்களுக்கு மிகவும் மரியாதைக்குரியவர். அவரை நாங்கள் மதிக்கிறோம். இந்த விவகாரத்தின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் கருத்தில் கொள்ளப்படும் என்று அவர் உறுதியளித்தார்” என்றார்.