புதுடெல்லி,
உலக சுகாதார அமைப்பு(WHO) மற்றும் யுனிசெப்(UNICEF) ஆகிய அமைப்புகள் இணைந்து கூட்டு கண்காணிப்புத் திட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையின்படி, உலக அளவில் பள்ளிகளில் சுகாதார வசதிகள் இல்லாத குழந்தைகளில், சுமார் ஐந்தில் ஒரு பங்கு குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர் என்றும், இது உலகின் எந்தவொரு நாட்டையும் விட அதிக எண்ணிக்கையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பள்ளிகளில் குடிநீர், சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்த முன்னேற்றம் 2015-2025" என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், 2025-ம் ஆண்டில் உலக அளவில் பள்ளிகளில் சுகாதார வசதிகள் இல்லாத 24.4 கோடி குழந்தைகளில் சுமார் 5 கோடி குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போல், நைஜீரியாவில் 3.4 கோடி, எத்தியோப்பியா 2.6 கோடி, காங்கோ ஜனநாயகக் குடியரசில் 1.1 கோடி மற்றும் இந்தோனேசியாவில் 80 லட்சம் குழந்தைகளுக்கு தங்களது பள்ளிகளில் சுகாதார வசதிகள் இல்லை என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) ஆகியவற்றின் கூட்டு கண்காணிப்புத் திட்டமானது, குடிநீர், சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான முன்னேற்றம் குறித்த சர்வதேச அளவிலான மதிப்பீடுகளை உருவாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.