தேசிய செய்திகள்

இந்தியாவில் 54.4 லட்சம் சமூக வலைதளப் பதிவுகள் முடக்கம்! – மெட்டா நிறுவனத்தின் அதிர்ச்சி தகவல்!

முந்தைய 6 மாத காலத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை சுமார் 13,000 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்ய ஜனவரியில், அரசு உத்தரவின் பேரில் 54 லட்சத்திற்கும் அதிகமான சமூக வலைதளப்பதிவுகளை நீக்கியதாக மெட்டா தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டில் 70,000 பதிவுகள் நீக்கம்

2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் மட்டும் 54 லட்சத்திற்கும் அதிகமான பதிவுகள் மற்றும் கணக்குகளை மெட்டா நிறுவனம் முடக்கியுள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை வெறும் 70,000 ஆக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி மாதம் அமல்படுத்தப்பட்ட புதிய அரசு விதிகளின்படி, சட்டவிரோதமான உள்ளடக்கங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த மூன்று மணிநேரத்திற்குள் அவற்றை நீக்கவேண்டும் என்ற கட்டாயம் உள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

நீக்கம் 13,000 சதவீதம் அதிகரிப்பு

முன்னதாக, இத்தகைய நடவடிக்கைகளுக்கு 36 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. முந்தைய 6 மாத காலத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை சுமார் 13,000 சதவீதம் அதிகரித்துள்ளதாக மெட்டாவின் வெளிப்படைத்தன்மை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி உயர்வு, அரசின் கண்காணிப்பு, இணைய தணிக்கை மற்றும் கருத்துச் சுதந்திரம் குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.

54 லட்சம் பதிவுகள் நீக்கம்

இந்தக் கட்டுப்பாடுகள் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களைப் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பிரதமர் மோடியின் அரசு மற்றும் ஆளும் பாஜகவைக் விமர்சிக்கும் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஆறு மாதங்களுக்குள் 54.4 லட்சம் உள்ளடக்கங்கள் முடக்கப்பட்டதன் மூலம், மெட்டாவின் தளங்கள் மீதான இத்தகைய கட்டுப்பாடுகளில் இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

SCROLL FOR NEXT