மும்பை,
மராட்டிய மாநிலம் சங்கலி மாவட்டம் மொதிவாடி கிராமத்தில் இந்து மத வழிபாட்டு தலமான மர்குதேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று மாலை 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபாடு செய்துகொண்டிருந்தனர். அப்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், பக்தர்களில் சிலர் கோவில் சுவர் அருகே அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது திடீரென கோவில் சுவர் இடிந்து விழுந்தது. மேலும், கூடாரமும் விழுந்தது. இந்த சம்பவத்தில் பக்தர்கள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து விரைந்து செயல்பட்ட சக பக்தர்கள், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். ஆனாலும், இந்த சம்பவத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து படுகாயமடைந்த 14 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.