தேசிய செய்திகள்

அழகு நிலைய உரிமையாளரை மிரட்டி ரூ.1 லட்சம் பறிப்பு: பெண்கள் உள்பட 6 போலி போலீசார் கைது

தங்களை ஒழுங்குமுறை போலீசார் என்றும், ஊடக நிருபர்கள் என்றும் கூறி அறிமுகம் செய்து கொண்டனர்.

பெங்களூரு,

பெங்களூருவில் அழகு நிலையத்தில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாகக் கூறி, உரிமையாளரை மிரட்டி ரூ.1 லட்சம் பறித்த பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

அழகு நிலையம்

பெங்களூரு வித்யாரண்யபுரா மெயின் ரோடு நஞ்சப்பா லே-அவுட்டில் சாய் நகரில் அழகுகலை நிபுணர் ஒருவர் சொந்தமாக அழகு நிலையமும், மசாஜ் சென்டரும் வைத்து நடத்தி வருகிறார்.

கடந்த 3-ந்தேதி இவரது அழகு நிலையத்துக்கு 4 பெண்கள் உள்பட 6 பேர் வந்தனர். அவர்கள் தங்களை ஒழுங்குமுறை போலீசார் என்றும், ஊடக நிருபர்கள் என்றும் கூறி அறிமுகம் செய்து கொண்டனர். மேலும் மசாஜ் சென்டரில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்துள்ளதாகவும், அதனால் தாங்கள் சோதனை நடத்த வந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

மிரட்டி..

இங்கு சட்டவிரோத செயல்கள் நடப்பதாக அம்பலப்படுத்தி விடுவோம் என்றும், சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு நற்பெயரை கெடுத்து விடுவோம் என்றும் மிரட்டினர். மேலும் அவ்வாறு செய்யமால் இருக்க ரூ.5 லட்சம் தர வேண்டும் என்றும் மிரட்டினர். இதனால் பயந்து போன அழகு நிலைய உரிமையாளர் உடனே அவர்களிடம் ரூ.1 லட்சத்தை கொடுத்தார்.

இதையடுத்து அந்த அழகு நிலைய உரிமையாளர் இதுபற்றி வித்யாரண்யபுரா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி லட்சுமி, மமதா, பிரியா, சகாயமேரி, யோக பாலு, ஆசிப் என பெண்கள் உள்பட 6 போலி போலீஸ்காரர்களை போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT