கொல்கத்தா,
மேற்குவங்காளத்தில் லாரி மீது பஸ் மோதிய கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 29 பேர் படுகாயமடைந்தனர்.
மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் மெனகுரி நகரில் இருந்து பாஸ்சிம் வர்தமான் மாவட்டம் டொமஹனி நகருக்கு இன்று மதியம் பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
ஜல்பைகுரி மாவட்டம் உலாடபரி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது பஸ் மோதியது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 29 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று மாநில முதல்-அமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.