டேராடூன்,
ஹெலிகாப்டரில் இருந்த விமானி மற்றும் பயணிகள் உள்பட 6 பேரும் விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் இருந்து டேராடூன் நோக்கி சென்ற ஹெலிகாப்டர் ஒன்று எதிர்பாராத விதமாக ஜோஷிமத் பகுதி அருகே விபத்திற்குள்ளானது. அங்குள்ள மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.
ஹெலிகாப்டரில் 5 பயணிகள் மற்றும் ஒரு விமானி என மொத்தம் 6 பேர் இருந்த நிலையில், விபத்திற்குள்ளான ஹெலிகாப்டரை தேடும் பணியில் காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் இந்தோ-திபெத் எல்லை காவல் படையினர் ஈடுபட்டனர். வான்வழித் தேடுதல் குழுக்களும் களமிறக்கப்பட்டன.
இந்நிலையில், விபத்திற்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த ஹெலிகாப்டரில் இருந்த 6 பேரும் விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், டிரான்ஸ் பாரத் ஏவியேஷன் (Trans Bharat Aviation) நிறுவனத்திற்குச் சொந்தமானது. VT-HCX என்ற பதிவு எண்ணைக் கொண்ட அந்த ஹெலிகாப்டர், இன்று பிற்பகல் 1.14 மணிக்கு பத்ரிநாத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிற்து.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை மற்றும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் விசாரணைக்குப் பிறகே முழு தகவல்கள் தெரியவரும்.