முதல்-மந்திரி என்.ரங்கசாமி  
தேசிய செய்திகள்

வங்கி கணக்கில் குவிந்த 6 மாத ரொக்கம்; புதுச்சேரி குடும்ப அட்டைதாரர்கள் மகிழ்ச்சி

மார்ச் 2026 முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான 6 மாதங்களுக்கு நிலுவையில் இருந்த அரிசி பணத்தை விடுவிக்க முதல்-மந்திரி என்.ரங்கசாமி உத்தரவிட்டார்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநில குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசிக்கு பதிலாக வழங்கப்படும் 6 மாதங்களுக்கான ரொக்கப் பணம் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிவப்பு அட்டைதாரர்களுக்கு ரூ.5,160-ம், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ.2,580-ம் கிடைத்துள்ளது.

ரொக்க பணம் வரவு

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் விலையில்லா அரிசிக்கு பதிலாக, அதற்குரிய பண மதிப்பை நேரடி பயனாளர் பண பரிமாற்ற திட்டத்தின் கீழ் வங்கி கணக்குகளில் செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ரூ.122.91 கோடி நிதி ஒதுக்கீடு

இந்நிலையில், மார்ச் 2026 முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான 6 மாதங்களுக்கு நிலுவையில் இருந்த அரிசி பணத்தை விடுவிக்க முதல்-மந்திரி என்.ரங்கசாமி உத்தரவிட்டார். அதன்படி, சுமார் ரூ.122.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு பணம்?

இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வரவு வைக்கப்பட்டுள்ள தொகை விவரம் வருமாறு:-

• சிவப்பு ரேஷன் அட்டைதாரர்கள்: மாதம் ரூ.860 வீதம், 6 மாதங்களுக்கு மொத்தம் ரூ.5,160 டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

• மஞ்சள் ரேஷன் அட்டைதாரர்கள்: மாதம் ரூ.430 வீதம், 6 மாதங்களுக்கு மொத்தம் ரூ.2,580 வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் மகிழ்ச்சி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கான மகளிர் உரிமை தொகை ரூ.2,500-ம் முன்கூட்டியே வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட நிலையில், தற்போது 6 மாத அரிசி பணமும் கிடைத்திருப்பது பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT