சென்னை
6 ஆயிரம் கிலோ போதைப்பொருள் வழக்கு தொடர்பாக சென்னை, மதுரையில் 13 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தியது.
2024-ம் ஆண்டு நவம்பரில் அந்தமான் தீவுகள் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில், மியான்மர் படகு ஒன்றை இந்திய கடலோர காவல் படை தடுத்து நிறுத்தி சோதனையிட்டது.
இதில், 6 ஆயிரம் கிலோ மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்தப்பட்டது தெரிய வந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.36 ஆயிரம் கோடியாகும். இதுதொடர்பாக படகில் இருந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் என்.ஐ.ஏ. இன்று சோதனையில் ஈடுபட்டது.
இதற்காக சென்னை, மதுரையில் 13 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ரூ.71 லட்சம் ரொக்கம், 53 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர், 1 லட்சத்து 50 ஆயிரம் மியான்மர் கியாட், ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றுடன் டிஜிட்டல் கருவிகள், முக்கிய ஆவணங்களை என்.ஐ.ஏ. கைப்பற்றியது. அதில், டிஜிட்டல் கருவிகள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன.