புதுடெல்லி,
மக்களவையில் 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை காவல்துறை செய்த என்கவுண்டர்களின் எண்ணிக்கை குறித்தும், என்கவுண்டர்கள் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் சந்தித்த வழக்குகள் குறித்தும் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சக இணை அமைச்சர் நித்யானந்த ராய், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தகவளின்படி, நாடு முழுவதும் கடந்த 2017 ஜனவரி 1-ந் தேதி முதல் 2022 ஜனவரி 31-ந் தேதி வரை 655 என்கவுண்டர்கள் நடந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதில் அதிகபட்சமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் 191, உத்தர பிரதேசத்தில் 117 என்கவுண்டர்கள் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அசாமில் 50, ஜார்ஜண்டில் 49, ஒடிசாவில் 36, ஜம்மு காஷ்மீரில் 35, மராட்டியத்தில் 26, பீகாரில் 22, அரியானாவில் 15 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டதாக பட்டியலிடப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை 14 என்கவுண்டர்கள் நடந்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர தெலங்கானா, மத்திய பிரதேசம், அருணாச்சல பிரதேசத்தில் 13 என்கவுண்டர்களும், ஆந்திரா, மேகாலயாவில் 9 என்கவுண்டர்களும், ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் 8 என்கவுண்டர்களும் நடந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.