புதுடெல்லி,
ஹோர்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பல்கள் பயணிப்பதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளபோதிலும் எல்பிஜி சமையல் எரிவாயு தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படுவதாகவும் மத்திய எண்ணெய் அமைச்சகம் தெரிவித்தது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
மார்ச் 23-ஆம் தேதியில் இருந்து எல்பிஜி சமையல் எரிவாயு மையங்களில் 6.6 லட்சம் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக 51 லட்சம் 14.2 கிலோ எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன. இதில் 95 சதவீதம் இணைய வழியில் முன்பதிவு செய்யப்படுகிறது.
சிலிண்டர்களை பதுக்கும் விநியோக மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து 50,000 சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 1,400 எல்பிஜி சமையல் எரிவாயு விநியோக மையங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு 36 விற்பனையாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் நாட்டில் வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் எல்பிஜி சமையல் எரிவாயு தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.