போபால்,
மத்தியப் பிரதேச மாநிலம் ராய்சென் மாவட்டத்தில் உள்ள நர்மதை நதிக்கரையில், 75 சென்டிமீட்டர் நீளமுள்ள வரலாற்றுக்கு முந்தைய யானையின் கீழ்த்தாடைப் புதைபடிவம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ராய்சென் மாவட்டம் தியோரி தாலுகாவில் உள்ள பத்தாய் கிராமத்தின் நர்மதை நதிப் படித்துறையில் கடந்த 10-ம் தேதி, சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றின் மண் அரிப்பினால் வெளிப்பட்டிருந்த விசித்திரமான பல் போன்ற அமைப்பை அவர்கள் கவனித்தனர். இதையடுத்து கிராம மக்கள் சுமார் 1.5 அடி ஆழத்திற்கு தோண்டிப் பார்த்தபோது, 75 செ.மீ நீளமும் 25 செ.மீ அகலமும் கொண்ட பிரம்மாண்ட கீழ்த்தாடைப் புதைபடிவம் முழுமையாகத் தெரியவந்தது.
அந்த தாடையை ஆய்வு செய்த தொல்லியல் மற்றும் புவியியல் நிபுணர்கள், இதன் கடவாய்ப் பற்களில் 7 முதல் 9 வரையிலான இணைக் கோடுகளும் தெளிவான பள்ளங்களும் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். மேலும், தாடையின் ஒரு பக்கத்தில் 6 வரிசைப் பற்களும், மறுபக்கத்தில் 7 வரிசைப் பற்களும் மட்டுமே உள்ளதால், இது முழுமையாக வளர்ச்சியடையாத ஒரு இளம் யானையாக இருந்திருக்கலாம் என டாக்டர் ரவி உபாத்யாய் உள்ளிட்ட ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆரம்பகட்ட ஆய்வுகளில் இது சுமார் 65 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 'ஸ்டெகோடான் நமாடிகஸ்' என்ற உயிரினமாக இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால், பற்களின் அமைப்பு மற்றும் அந்த பகுதியின் மஞ்சள் நிற மண் அடுக்குகளை (பனேட்டா நிலப்பரப்பு) ஆய்வு செய்த இந்திய புவியியல் ஆய்வு மைய நிபுணர்கள், இது பூமியில் வாழ்ந்த மிகப்பெரிய யானை இனங்களில் ஒன்றான 'பேலியோலோக்சோடான்' இனத்தைச் சேர்ந்ததாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று கூறுகின்றனர். இதனால், இந்த புதைபடிவம் 65 லட்சம் ஆண்டுகள் பழமையானதா அல்லது 30,000 முதல் 7 லட்சம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பிளீஸ்டோசீன் காலத்தைச் சேர்ந்ததா என்ற புதிய கேள்வி எழுந்துள்ளது.
மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள இந்த கண்டுபிடிப்புப் பகுதிக்கு உள்ளூர் நிர்வாகம் 24 மணி நேரப் பாதுகாப்பை வழங்கியுள்ளது. புதைபடிவத்திற்கு சேதம் ஏற்படாமல் இருக்க, அதனை அங்கிருந்து அகற்றாமல் அந்த இடத்திலேயே வைத்து சுற்றியுள்ள படிமங்களை நுண்ணிய ஆய்வுக்கு உட்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த ஆய்வின் முடிவுகள் நர்மதை பள்ளத்தாக்கின் பண்டைய சூழலியல் குறித்த பல ரகசியங்களை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.