பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் 
தேசிய செய்திகள்

கடல் எல்லையை பாதுகாக்க 8 அதிநவீன போர்க்கப்பல்கள்: ஒப்பந்தம் கையெழுத்து

ஜிஆர்எஸ்இ நிறுவனம் ஐந்து போர்க்கப்பல்களையும், ஜிஎஸ்எல் நிறுவனம் மூன்றையும் உருவாக்கும்.

புது டெல்லி,

இந்திய கடற்படையின் பலத்தை உலக நாடுகளுக்கு பறைசாற்றும் வகையில், ரூ.53,866.50 கோடி மதிப்பில் 8 அடுத்த தலைமுறை போர்க்கப்பல்களை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

புதுடெல்லியில் உள்ள கர்த்தவ்ய பவன்-2 வளாகத்தில், பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய கடல் எல்லையை பாதுகாக்கவும், கடற்படையின் தாக்குதல் திறனை பலமடங்கு அதிகரிக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய 8 அடுத்த தலைமுறை போர்க்கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, மத்திய பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களான கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் லிமிடெட் மற்றும் கோவா ஷிப்யார்ட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

உள்நாட்டு தயாரிப்பு

இந்த ஒப்பந்தத்தின்படி, ஜிஆர்எஸ்இ (GRSE) நிறுவனம் 5 போர்க்கப்பல்களையும், ஜிஎஸ்எல் (GSL) நிறுவனம் 3 போர்க்கப்பல்களையும் தயாரித்து வழங்கவுள்ளன. இந்தியக் கடற்படையால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, போட்டித் தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய நிறுவனங்களால் கட்டப்படும் முதல் கப்பல் திட்டம் இதுவாகும்.

நவீன ரக ஆயுதங்கள்

இந்த புதிய போர்க்கப்பல்களில் வான்வெளி, தரைப்பகுதி மற்றும் நீருக்கடியில் இருந்து வரும் எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் அதிநவீன ஏவுகணைகள், நவீன ரக ஆயுதங்கள் மற்றும் அதிநவீன உணர்விக் கருவிகள் பொருத்தப்படவுள்ளன. இவை இந்திய் கடற்படையில் சேர்க்கப்படும் போது, கடல்வழி வர்த்தக பாதைகளை பாதுகாத்தல், நீர்மூழ்கி கப்பல்களுக்கு எதிரான போர், கடலோர பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்பு பணிகள் பலமடங்கு வலுவடையும்.

உள்நாட்டு தொழில்நுட்பங்கள்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ மற்றும் தற்சார்பு இந்தியா திட்டங்களுக்கு இந்த ஒப்பந்தம் மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது. முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூலப்பொருட்கள் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்கள் மட்டுமே இக்கப்பல்களின் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளன.

பாதுகாப்புத் துறையில் இந்தியா தற்சார்பு அடைவதை நோக்கிய இந்த நடவடிக்கை, இந்திய ராணுவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT