மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான திவேகர் கடற்கரைக்கு புனேயைச் சேர்ந்த தனியார் பயிற்சி மைய மாணவர்கள் சுற்றுலா சென்றனர். 48 மாணவர்கள் சுற்றுலாவுக்கு சென்ற நிலையில் அவர்களில் 8 பேர் கடலில் இறங்கி விளையாடியுள்ளனர். கடலின் ஆழம் மற்றும் நீரோட்டத்தை சரியாக கணிக்காமல் கடலுக்குள் இறங்கிய 8 மாணவர்களும் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து மீட்புக் குழுவினர் மற்றும் உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 8 மாணவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன. உயிரிழந்த அனைவரும் 16 வயதுடையவர்கள் என்றும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
சுற்றுலாவுக்கு சென்ற குழுவில் 25 மாணவர்கள், 17 மாணவிகள் மற்றும் 6 ஆசிரியர்கள் என மொத்தம் 48 பேர் இடம்பெற்றிருந்தனர். மாணவர்களை அழைத்து சென்ற பயிற்சி மையம் அலந்தி பகுதியில் செயல்பட்டு வருவதாகவும், சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், பள்ளி சுற்றுலாக்களுக்கான புதிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்றும் மராட்டிய அரசு தெரிவித்துள்ளது. சுற்றுலாவுக்கு சென்ற மாணவர்கள் கடலில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தது மராட்டியத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.