தேசிய செய்திகள்

வழி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 9 பவுன் சங்கிலி பறிப்பு; மர்ம நபர்கள் கைவரிசை

பெண்ணின் கழுத்தில் இருந்த 9 பவுன் சங்கிலியையும், ஸ்கூட்டர் சாவியையும் பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

காரைக்கால்

காரைக்கால் ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் சரண்யா (வயது 37). இவரது கணவர் ரகுராமன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். காரைக்காலை அடுத்த நெடுங்காடு பண்டாரவடை ஏரிக்கரை அருகில் தங்களுக்கு சொந்தமான பருத்தி வயலை பார்வை இடுவதற்காக சரண்யா நேற்று முன்தினம் மாலை ஸ்கூட்டரில் சென்றார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், சரண்யாவை நிறுத்தி கும்பகோணத்திற்கு வழி கேட்டு உள்ளனர். அதற்கு சரண்யா தெரியவில்லை என கூறியிருக்கிறார். அப்போது திடீரென இரண்டு நபர்களில் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி, சரண்யா கழுத்தில் இருந்த 9 பவுன் சங்கிலியையும், ஸ்கூட்டர் சாவியையும் பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

உடனே, செல்போன் மூலம் சரண்யா தனது தந்தை சிவக்குமாருக்கு தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து தந்தை சிவக்குமார் உதவியுடன் சரண்யா நெடுங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் 9 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.