போர்ட் லூயிஸ்
மொரீசியஸ் நாட்டுக்கு மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த வியாழக்கிழமை அந்நாட்டின் போர்ட் லூயிஸ் நகரை சென்றடைந்த அவரை, மொரீசியசுக்கான வெளிவிவகாரம், மண்டல ஒருங்கிணைப்பு மற்றும் சர்வதேச வர்த்தக மந்திரி தனஞ்ஜெய் ராம்புல் வரவேற்றார்.
இந்த 2 நாள் பயணத்தில், இரு நாடுகளிடையே, மண்டல பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், தொடர்ச்சியான உயர்மட்ட ஆலோசனைகளை அவர் மேற்கொண்டார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, இந்தியா சார்பில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் மொரீசியஸின் பிரதமர் நவீன் ராம்கூலத்திடம் 90 மின்சார பஸ்களை ஒப்படைத்ததுடன், இந்தியாவுக்கும், மொரீசியசுக்கும் இடையேயான நிலையான போக்குவரத்து மற்றும் பசுமை கூட்டாண்மைக்கான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தலையும் உறுதிப்படுத்தினார்.
இதேபோன்று, கடல்சார் பாதுகாப்பு, மண்டல ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி ஆகியவை பற்றி விவாதிப்பதற்கான 9-வது இந்திய பெருங்கடல் மாநாட்டிலும் அவர் பங்கேற்றார்.