துப்பாக்கி 
தேசிய செய்திகள்

வகுப்பறைக்குள் சக மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் 9-ஆம் வகுப்பு மாணவன் படுகாயம்

மாணவன், தனது பையில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட நாட்டு துப்பாக்கி ஒன்றை மறைத்து எடுத்து வந்துள்ளான்.

பாலக்காடு,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் சக மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் 9-ஆம் வகுப்பு மாணவன் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டு துப்பாக்கி

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் திரித்தாலா பகுதியில் பருரூர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கொடுமுண்டாவைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் படித்து வருகிறான்.

இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த அந்த மாணவன், தனது பையில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட நாட்டு துப்பாக்கி ஒன்றை மறைத்து எடுத்து வந்துள்ளான்.

துப்பாக்கி சூடு

இன்று காலை வகுப்பறையில் இருந்தபோது, அந்த மாணவன் தான் கொண்டு வந்த துப்பாக்கியால் திடீரென சுட்டுள்ளான். இதில் முதல் குண்டு தரையில் பாய்ந்தது. அடுத்த குண்டு அஞ்சுமூலாவை சேர்ந்த சக மாணவனின் கையில் பாய்ந்தது.

தீவிர சிகிச்சை

துப்பாக்கி சத்தம் கேட்டு வகுப்பறையில் இருந்த மாணவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர். இதில் கையில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் துடித்த மாணவனை ஆசிரியர்கள் மீட்டு, கோட்டக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவனது கையில் பாய்ந்துள்ள குண்டை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தீவிர விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த திரித்தாலா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். மாணவனுக்கு இந்த நாட்டுத் துப்பாக்கி எப்படி கிடைத்தது? வீட்டில் துப்பாக்கியை பாதுகாப்பாக வைப்பதில் பெற்றோரின் கவனக்குறைவு இருந்ததா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக உதவி ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், விசாரணைக்கு பிறகு இதற்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். கிராமப்புற பள்ளிக்குள் மாணவன் துப்பாக்கி கொண்டு வந்து சுட்ட சம்பவம், மாணவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும், பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT