தேசிய செய்திகள்

படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த சிறுவன் பாம்பு கடித்து பலி

ஆல்ஜோவை எழுப்பியபோது அவன் பேச்சு மூச்சு இல்லாமல் படுக்கையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருச்சூர் கோடாலி பகுதியை சேர்ந்த சில்ஜோ, ஜோண்ஷி தம்பதியின் மகன்கள் அனோத் (10), ஆல்ஜோ (8). நேற்று முன்தினம் இரவு மகன்கள் இருவரும் அவர்களது அறையில் தூங்கிகொண்டிருந்தபோது சிறிது நேரத்தில் இளையமகன் ஆல்ஜோ என்னை எதுவோ கடித்துவிட்டது என்று கூறியுள்ளான். மேலும், உடம்பு வலிக்கிறது மற்றும் வாந்தி வருவதுபோல் இருக்கிறது என பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளான். இதை கவனிக்காத பெற்றோர் காலையில் பார்த்துக்கொள்ளலாம் தூங்கு என்று கூறியுள்ளனர். நேற்று காலையில் ஆல்ஜோவை எழுப்பியபோது அவன் பேச்சு மூச்சு இல்லாமல் படுக்கையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆல்ஜோ ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து, சிறுவர்கள் படுத்திருந்த அறையை சோதனை செய்தனர். அப்போது, ஆல்ஜோ படுத்திருந்த தலையணையை தூக்கி பார்த்த போது அங்கு 2 அடி நீளம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு உயிருடன் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த திருச்சூர் நகராட்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.