காளை மாடு 
தேசிய செய்திகள்

பேரக்குழந்தையை கையில் ஏந்தியிருந்த முதியவரை விரட்டி விரட்டி தாக்கிய காளை

காளை தாக்கிய வேகத்தில் முதியவர் குழந்தையுடன் தரையில் தூக்கி வீசப்பட்டார்.

ராய்ப்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், கையில் ஒரு வயது பேரக்குழந்தையுடன் வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த முதியவரை, தெருக் காளை ஒன்று கொடூரமாக விரட்டி விரட்டி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திடீர் தாக்குதல்

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரின் டிடி நகர் பகுதியில் தேவ்நாராயண் சர்மா என்ற முதியவர் வசித்து வருகிறார். இவர் நேற்று (செவ்வாய்கிழமை) தனது வீட்டின் வாசலில், ஒரு வயது பேரக்குழந்தையை கையில் ஏந்தியபடி நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தெருக் காளை ஒன்று, எதிர்பாராத விதமாக முதியவரை நோக்கி பாய்ந்து வந்து அவரை கொடூரமாக முட்டித் தள்ளியது.

உயிரைக் காக்க போராட்டம்

காளை தாக்கிய வேகத்தில் முதியவர் குழந்தையுடன் தரையில் தூக்கி வீசப்பட்டார். அவர் கீழே விழுந்த பிறகும், ஆத்திரமடங்காத அந்த காளை அவரை விடாமல் தொடர்ந்து முட்டித் தள்ளியது. காளையின் பிடியில் இருந்து குழந்தைக்கு எந்த ஆபத்தும் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, முதியவர் குழந்தையை நெஞ்சோடு அணைத்தபடி கடுமையாக போராடினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், காளையை அங்கிருந்து விரட்டி முதியவரையும் குழந்தையையும் பத்திரமாக மீட்டனர்.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

பார்ப்பவர்களை பதற வைக்கும் இந்த பயங்கரமான தாக்குதலில், அதிர்ஷ்டவசமாக முதியவரும் குழந்தையும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் இருவருக்கும் அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பரபரப்பான சிசிடிவி காட்சி

இந்த ஒட்டுமொத்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தீவிரமாக பரவி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், தெருக்களில் சுற்றும் மாடுகளின் அச்சுறுத்தல் குறித்த அச்சத்தையும் பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT