தேசிய செய்திகள்

தோளில் பாரம், மனதில் சோகம்... 2 வயது சகோதரனுடன் பள்ளிக்கு வரும் சிறுமியின் சோக பின்னணி

இதுபோன்ற கஷ்டம் நிறைந்த குடும்ப சூழலில் படித்து வரும் சிறுமிக்கு ஆதரவும், கல்வியும் அளிக்க வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு உள்ளது என நெட்டிசன்கள் தெரிவித்து உள்ளனர்.

காத்மண்டு

நேபாளத்தில் வசித்து வரும் 14 வயது சிறுமி அஸ்மிதா தமங். ஆயிரம் கனவுகளுடன் பள்ளிக்கு சென்று ஆர்வத்துடன் படித்து வந்த இவர் மற்ற மாணவிகளை போன்று துள்ளி விளையாடும் வயதில், திடீரென அந்த சம்பவம் நடந்தது.

9-ம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் அந்த சிறுமியின் தாய் திடீரென மரணம் அடைந்து விட, குடும்ப பொறுப்பை சுமக்கும் பெரிய பாரம் தமங்கிடம் வந்து சேர்ந்துள்ளது. பலரும் பையை தோளில் போட்டு கொண்டு, பள்ளிக்கு சென்று படிப்பில் ஆர்வம் செலுத்துவது மற்றும் ஆடிப்பாடி மகிழ்ந்திருக்க கூடிய இந்த வயதில், தமங்கின் வாழ்க்கை திசைமாறிய பறவையாகி போனது.

அவருக்கு 3 சகோதர சகோதரிகள் உள்ளனர். தந்தை வேலைக்கு சென்று விடுவார். இதனால், பிறந்து 18 மாதமேயான தன்னுடைய சகோதரனை தூக்கி கொண்டு தினமும் பள்ளிக்கு வந்து விடுவார். அப்போதுதான் அந்த சிறுமியால் நிம்மதியாக படிப்பில் கவனம் செலுத்த முடியும். சிறுமியின் அரவணைப்புக்குள்ளேயே சகோதரன் வளர்ந்து வருகிறான்.

இதனை ஒரு நாள் தற்செயலாக ஆசிரியர் ஒருவர் கவனித்து விட்டார். வகுப்பறையில் சிறுமியுடன், சிறிய சகோதரனும் இருப்பது தெரிந்து அதுபற்றி விசாரித்து உள்ளார். கண்களில் கனவுகளுடன் இருக்க வேண்டிய இந்த சின்ன வயதில், கண்ணீருடன் சிறுமி இருக்கும் இந்த விசயம் சமூக ஊடகத்தில் பரவியது. வீடியோ ஒன்றும் வைரலாகி உள்ளது.

இதுபோன்ற கஷ்டம் நிறைந்த குடும்ப சூழலில் படித்து வரும் சிறுமிக்கு ஆதரவும், பாதுகாப்பும் மற்றும் கல்வியும் அளிக்க வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு உள்ளது என நெட்டிசன்கள் தெரிவித்து உள்ளனர். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டிய வயதில், மூத்தவர்கள் சுமக்க கூடிய பெரிய பொறுப்புகளையும் இந்த வயதில் அந்த சிறுமி ஏற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அவருடைய கல்விக்கான அர்ப்பணிப்பும், துயரை தாங்கும் மனவலிமையும் மதிக்கத்தக்க ஒன்றாக இருந்தபோதும், அரசு அமைப்புகளும், அதிகாரிகளும் இதனை கவனத்தில் கொள்ள வேண்டிய, ஆதரவு தர வேண்டிய அவசியமும் உள்ளது. அதனால், இதுபோன்ற சிறுமிகள் வாழ்வின் சுமைகளை தனியாக சுமக்காமல், தொடர்ந்து கல்வி கற்க முடியும்.