பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வையாலி காவல் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், சமூக வலைதளங்களில் வைரலாவதற்காக ஒரு 'ரீல்' எடுக்க திட்டமிட்டார். தற்போது உகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகை வருவதால். பெங்களூருவிலிருந்து பிற இடங்களுக்கு செல்ல பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் டிக்கெட் கிடைப்பதில் உள்ள சிரமத்தையும் கிண்டல் செய்யும் விதமாக ஒரு வீடியோ எடுக்க முடிவு செய்தார்.
இதற்காக அந்த பெண், தனது தந்தையை ஒரு பெரிய சாக்கு மூட்டைக்குள் வைத்து கட்டினார். தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து, அந்த மூட்டையை ஒரு தனியார் கூரியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றார். ஊழியர்களிடம், இந்த மூட்டையை மங்களூருக்கு பார்சல் செய்ய வேண்டும் என்று கூறினார். மூட்டைக்குள் ஏதோ அசைவதை கண்டு சந்தேகமடைந்த ஊழியர்கள், உள்ளே என்ன இருக்கிறது என்று கேட்டனர். அதற்கு குடும்பத்தினர் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே, சந்தேகம் அடைந்த ஊழியர்கள் மூட்டையை பிரித்து பார்த்தனர்.
உள்ளே ஒரு முதியவர் இருப்பதை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த முதியவர் மூச்சுவிட கூட முடியாமல் திணறி கொண்டிருந்தார். பின்னர் அவர் மீட்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பின்னரும் கூட, அந்த பெண் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தார். இதனை தொடர்ந்து கூரியர் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு தனது தந்தை மங்களூருக்கு செல்ல டிக்கெட் கிடைக்காததால் ஏற்பட்ட விரக்தியில் இப்படி செய்ததாக அந்த இளம்பெண் வாக்குமூலம் அளித்தார். ஒரு முதியவரின் உயிரோடு விளையாடியதற்காக போலீசார் அவர்களை கடுமையாக எச்சரித்தனர். குடும்பத்தினர் அனைவரும் தங்கள் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு வீடியோ பதிவு செய்த பின்னர், போலீசாரால் எச்சரித்து அனுப்பப்பட்டனர். இந்த சம்வம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.