தேசிய செய்திகள்

கள்ளக்காதலை கண்டித்த விவசாயி படுகொலை மனைவி, கள்ளக்காதலன் கைது

ராய்ச்சூர் அருகே, கள்ளக்காதலை கண்டித்ததால் விவசாயியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி, கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ராய்ச்சூர்:

கள்ளக்காதல்

ராய்ச்சூர் மாவட்டம் சிரவாரா தாலுகா மாரட்டா கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ்(வயது 36). விவசாயி. இவரது மனைவி லட்சுமி(30). இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் லட்சுமிக்கும், மாரட்டா கிராமத்தை சேர்ந்த சிவராஜ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதனால் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து உள்ளனர். பின்னர் பசவராஜ் வீட்டில் இல்லாத போது வீட்டிற்கே சென்று லட்சுமியுடன், சிவராஜ் உல்லாசம் அனுபவித்து உள்ளார். இதுபற்றி அக்கம்பக்கத்தினர் மூலம் பசவராஜிக்கு தெரியவந்து உள்ளது. இதையடுத்து சிவராஜ் உடனான கள்ளக்காதலை கைவிடும்படி லட்சுமியை, பசவராஜ் கண்டித்து உள்ளார். ஆனால் கள்ளக்காதலை கைவிட லட்சுமி மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் பசவராஜ், லட்சுமி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

கழுத்து அறுத்து கொலை

இதையடுத்து பசவராஜ் உயிருடன் இருந்தால் கள்ளக்காதலை தொடர முடியாது என்று நினைத்து லட்சுமி பசவராஜை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதுபற்றி அவர் தனது கள்ளக்காதலன் சிவராஜிடம் தெரிவித்தார். இதற்கு ஒப்புக்கொண்ட சிவராஜும், பசவராஜை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெளியே சென்று விட்டு பசவராஜ் வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டில் மறைந்து இருந்த சிவராஜ், பசவராஜின் கழுத்தை கத்தியால் அறுத்தார். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து பசவராஜ் உயிரிழந்தார். இந்த கொலைக்கு லட்சுமியும் உடந்தையாக இருந்துள்ளார். கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சிரவாரா போலீசார் தலைமறைவாக இருந்த லட்சுமி, சிவராஜை நேற்று கைது செய்தனர்.

SCROLL FOR NEXT