மும்பை,
யவத்மால் பகுதியை சேர்ந்த ஒரு பெண். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று துல்ஜாபூரில் இருந்து சம்பாஜிநகர் நோக்கி சென்ற அரசு பஸ்சில் தனது 2 குழந்தைகளுடன் ஏறினார். பஸ் பாதி வழியில் சென்றுகொண்டிருந்தபோது, அந்தப்பெண் திடீரென தனது குழந்தைகளை விட்டுவிட்டு, பஸ்சில் இருந்து கீழே இறங்கி, தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.
இதைத்தொடர்ந்து பஸ் மீண்டும் புறப்பட்டுச்சென்றது. இந்தநிலையில் நீண்டநேரமாக தாயை காணாமல் 2 குழந்தைகளும் பஸ்சுக்குள் கதறி அழுதுள்ளன.
இதைப்பார்த்த கண்டக்டர் குழந்தைகளிடம் விசாரித்தார். அப்போது அவர்களின் சட்டைப்பையில் ஒரு துண்டுச்சீட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கடிதத்தில், "நான் என் விருப்பப்படி வாழச்செல்கிறேன். பிள்ளைகளை தாத்தாவிடம் ஒப்படைத்து விடுங்கள் எனக்கு கள்ளக்காதலுடன் இருக்கவே விருப்பம். அவருடன் உல்லாசமாக ஊர் சுற்றுவே பிடிக்கும்" என்று குறிப்பிட்டு, பிள்ளைகளின் தாத்தாவின் போன் நம்பரை எழுதி வைத்திருந்தார். இதையடுத்து, பஸ் கண்டக்டர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார் குழந்தைகளை மீட்டு, குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே, துண்டுச்சீட்டில் இருந்த போன் நம்பரை வைத்து குழந்தைகளின் தாத்தாவை போலீசார் தொடர்பு கொண்டு, பீட் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். போலீஸ் நிலையத்திற்கு வந்த தாத்தா, தனது பேரக்குழந்தைகளின் நிலையை கண்டு உருகி அழுவார் என்று போலீசார் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ, "என் மகள் வீட்டில் இருந்த ஒரு மோட்டார் சைக்கிள், செல்போன் மற்றும் ரூ.20 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாள்” என்று அந்தப்பொருட்கள் குறித்தே போலீசாரிடம் அதிகம் கவலைப்பட்டு குமுறினார்.
பேரக்குழந்தைகளின் நலனில் அவர் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. கள்ளக்காதலனுக்காக பெற்ற பிள்ளைகளை நடுத்தெருவில் தவிக்கவிட்டு சென்ற கல்நெஞ்சக்கார தாய் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.