போபால்,
மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
குனோ தேசிய பூங்காவில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் அரங்கேறியுள்ளது: காமினி (Gamini) எனும் பெயருடைய, இந்தியாவில் பிறந்த 25 மாத வயதுடைய பெண் சிறுத்தை ஒன்று, வனப்பகுதியில் நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது. இது இந்தியாவின் சிறுத்தை பாதுகாப்பு பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக திகழ்கிறது.
கடந்த 2022-ஆம் ஆண்டில் சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் தொடங்கியதிலிருந்து, ஓராண்டுக்கும் மேலாக இந்த சிறுத்தை, வனப்பகுதியில் வாழ்ந்து வருகிறது. மேலும் வனப்பகுதியில் நிகழ்ந்ததாக பதிவு செய்யப்பட்ட முதல் பிரசவமாகும். மேலும் குறிப்பிடத்தக்க வகையில், இந்தியாவில் பிறந்த ஒரு பெண் சிறுத்தை குட்டிகளை ஈனுவது இதுவே முதல் முறையாகும்.
இயற்கையான சூழலில் உயிர்வாழ்வதும், இனப்பெருக்கம் செய்வதும் ஆகியவை இத்திட்டத்தின் மைய நோக்கங்களை அடைவதை நோக்கிய ஒரு மிக முக்கியமான படியாக இந்த நிகழ்வு அமைகிறது.
இந்த சாதனை, இந்திய சூழலுக்கு சிறுத்தைகள் படிப்படியாக பழகி வருவதை பிரதிபலிப்பதுடன், குனோ தேசிய பூங்காவின் மேலாளர்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் களப்பணியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அயராத முயற்சிகளுக்கு சான்றாகவும் விளங்குகிறது.
இது நாட்டிற்கே பெருமை சேர்க்கும் ஒரு தருணமாகும். இத்தருணத்தில் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் தெரிவித்தார்.