தேசிய செய்திகள்

பயணத்தோடு ஒரு தேனிலவு... முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி!

முதல் வகுப்பு ஏ.சி. பெட்டியை, தனியார் ஏஜென்சி ஒன்று இவ்வாறு மாற்றி இருந்தது.

மும்பை,

மராட்டிய மாநிலம் ஜால்னா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்றின் முதல் வகுப்பு ஏ.சி. தனியறை பெட்டி சொகுசு ஓட்டலின் 'ஹனிமூன் சூட்' போல அலங்கரிக்கப்பட்டு இருந்தது சமூகவலைதள வீடியோவில் வைரலாகி வருகிறது.

அந்த 'கூபே' அறையின் கூரையில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பலூன்களாலும், இருக்கைகளில் இதயம் போன்று ரோஜா இதழ்களாலும், அறையின் பிற பகுதிகள் மலர் மாலைகள் மற்றும் மலர்களாலும், ஏறும் படிக்கட்டுகளில் செயற்கை விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

புதுமண தம்பதி

படுக்கையில் “ஐ லவ் யூ" என்ற எழுத்துக்களையும் இடம்பெற செய்து இருந்தது. அந்த அறையே முதல் இரவு அறைபோல் முற்றிலும் மாற்றப்பட்டிருந்தது. யாரோ ஒரு புதுமண தம்பதிக்காக முன்பதிவு செய்யப்பட்டு இருந்த அந்த பெட்டியை, தனியார் ஏஜென்சி ஒன்று இவ்வாறு மாற்றி இருந்தது. தங்களின் அலங்கார திறமையை வெளிஉலகிற்கு காட்டுவதற்காக அந்த வீடியோவை சமூக வலைத்ளங்களில் வைரல் ஆக்கியதும் அந்த தனியார் நிறுவனம்தான் என சொல்லப்படுகிறது.

ஆனால் அதில் பயணித்தவர்கள் யார்? என்ற விவரங்கள் தெரியவில்லை. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, ஓடும் ரெயிலில் இப்படி அலங்காரம் செய்ய அனுமதி உண்டா? என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் எழுந்தது. மேலும் சிலர் கடுமையாக விமர்சித்தும் கருத்துகளை பதி விட்டு இருந்தனர். இதற்கு ரெயில்வே அதிகாரிகளும் விளக்கம் அளித்திருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வருகின்றன.

ரெயில்வே விளக்கம்

அதில், 'சம்பந்தப்பட்ட பயணி 'பர்ஸ்ட் ஏசி கூபே'யில் உள்ள 2 படுக்கைகளையும் (அதாவது முழு அறையையும்) தங்களது தனிப்பட்ட பயன்பாட்டுக்காக முன்பதிவு செய்திருந்தார். எனவே, அந்தப் பயணம் முழுவதும் அந்த அறை அவர்களுக்குரியது. இந்த அலங்காரத்தால் ரெயில்வே சொத்துகளுக்கோ அல்லது ரெயில்வேயின் செயல்பாடுகளுக்கோ எந்தவித பாதிப்போ, சேதமோ ஏற்படவில்லை.

முழுமையாக முன்பதிவு செய்யப்பட்ட ஒரு தனிஅறைக்குள் பயணிகள் இது போன்ற அலங்காரங்களைச் செய்வதை தடுக்கும் பிரத்தியேக விதிகள் எதுவும் ரெயில்வேயில் இல்லை' என தெரிவித்துள்ளனர். ஆனால் இதுதொடர்பாக ரெயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.

'டிரெண்ட்'

முழு அறையையும் முன்பதிவு செய்து தங்களது பயணத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்ற முயன்ற தம்பதியின் இந்த 'ரொமாண்டிக்' வீடியோ, தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது. இருப்பினும், பலூன்கள், காகிதங்கள் எளிதில் தீப்பற்ற வாய்ப்புள்ளது என பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து நெட்டிசன்கள் சிலர் சமூக தொடர்ந்து கேள்வி எழுப்பிவரும் சூழலில், பெரும்பாலானோர் இந்த தனித்துவமான முயற்சியைப் பாராட்டி, 'வீல்ஸ் ஆன் ஹனிமூன்' (பயணத்தோடு ஒரு தேனிலவு) என்று வேடிக்கையாக குறிப்பிட்டும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.