டேராடூன்,
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக ராணுவங்களுக்கு இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சி உத்தராகண்ட் மாநிலத்தில் இன்று விறுவிறுப்புடன் தொடங்கியது. மலைப்பகுதி போர் பயிற்சியை மையமாக கொண்ட இக்கூட்டு பயிற்சி குறித்து பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:-
இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான 'மவுண்டைன் கார்டியன் 2026' என்ற கூட்டு ராணுவ பயிற்சி, உத்தராகண்ட் மாநிலம் சௌபாட்டியாவில் உள்ள வெளிநாட்டு பயிற்சி மையத்தில் இன்று தொடங்கியது. வருகிற அக்டோபர் 18-ந் தேதி வரை இப்பயிற்சி தொடர்ந்து நடைபெற உள்ளது. சவாலான மலைப்பகுதிகளில் நடைபெறும் போர்களில் இரு நாட்டு ராணுவமும் இணைந்து செயல்படும் திறன், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இப்பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் இரு நாட்டு ராணுவங்களையும் சேர்ந்த மொத்தம் 92 வீரர்கள் சம எண்ணிக்கையில் பங்கேற்றுள்ளனர். இந்திய ராணுவத்தின் சார்பில் 'பைரவ் பட்டாலியன்' வீரர்களும், ஐக்கிய அரபு அமீரக ராணுவத்தின் சார்பில் மலைப்பகுதி தரைப்படை பட்டாலியன் வீரர்களும் இதில் களம் இறங்கியுள்ளனர். குறிப்பாக, இருநாட்டு ராணுவத்தைச் சேர்ந்த பெண் அதிகாரிகளும், பெண் வீரர்களும் இந்த அரிய கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
14 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில், கூட்டுத் திட்டமிடல், உத்திசார்ந்த பயிற்சிகள், நவீன துப்பாக்கிச் சுடுதல், கண்காணிப்புக் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், ட்ரோன்களை கையாளுதல், உடல் வலிமை மற்றும் தடை தாண்டும் பயிற்சிகள், ஒருங்கிணைந்த களப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு கடினமான பயிற்சிகள் வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
மேலும், சவாலான மலைப்பகுதிகளில் நவீன தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும், இரு நாட்டு ராணுவத்தின் சிறந்த போர் உத்திகள் மற்றும் நடைமுறைகளை பரஸ்பரம் பரிமாறி கொள்ளவும் இக்கூட்டு பயிற்சி வழிவகை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.