தேசிய செய்திகள்

வங்கியில் உதவுவது போல் நடித்து இளம்பெண்ணிடம் ரூ.1.25 லட்சம் பணத்தை சுருட்டிய பலே ஆசாமி

வேறு படிவத்தை நிரப்புவதற்காக சென்ற சந்தர்ப்பத்தில், கவுண்டரில் கொடுத்த பணத்தை மர்ம நபர் பெற்றுக்கொண்டு தப்பி சென்றுவிட்டார்.

ஜிந்த்,

வங்கியில் உதவுவது போல் நடித்து இளம்பெண்ணிடம் ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் திருடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பணம் திருட்டு

ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டம், சபிதோன் நகரில் எஸ்.பி.ஐ. வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்று அங்கு வந்த இளம்பெண் ஒருவர் வங்கியில், பணம் போடும் படிவத்தை நிரப்பி தருவதற்கு அருகில் இருந்த அடையாளம் தெரியாத நபரின் உதவியை நாடியுள்ளார். ஆனால் அந்த நபர் படிவத்தில் உள்ள கணக்கு எண்ணில் ஒரு இலக்கத்தை ரகசியமாக மாற்றி உள்ளார்.

பின்னர், அந்தப் பெண் படிவத்தையும், ரூ.1.25 லட்சம் பணத்தையும் கவுண்டரில் கொடுத்துள்ளார். அந்த கணக்கு எண்ணை கம்ப்யூட்டரில் பதிவு செய்தபோத தவறாக இருந்ததை சுட்டிக்காட்டியது. இதுபற்றி கேஷியர், அந்த பெண்ணிடம் கூறினார். அப்போது உதவி செய்த நபரும் அந்த பெண்ணின் அருகிலேயே நின்றிருந்தார்.

அவர், அந்த பெண்ணிடம் பின்னால் சென்று வேறு படிவத்தை எடுத்து சரியாக கணக்கு எண்ணை எழுதி வரும்படி கூறினார். அந்த பெண்ணும் வேறு படிவத்தை நிரப்புவதற்காக பின்னால் சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர், கேஷியரிடம் சென்று தவறான தகவலுடன் கொடுக்கப்பட்ட படிவத்தையும், ரூ.1.25 லட்சம் பணத்தையும் பெற்றுக்கொண்டு நைசாக நழுவிவிட்டார்.

சிறிது நேரத்தில் நிரப்பப்பட்ட புதிய படிவத்துடன் வந்த பெண், கவுண்டருக்கு வந்தபோது, அவருடன் வந்த நபர் பணத்தை எடுத்துச் சென்றதாக கேஷியர் கூறினார். இதனால் அந்த பெண் அதிர்ச்சியடைந்தார். உதவி செய்வதுபோல் நடித்த அந்த நபர், மொத்த பணத்தையும் சுருட்டிக்கொண்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

மர்ம நபருக்கு வலைவீச்சு

பணத்தை பறிகொடுத்த இளம்பெண், சபிதோன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பி ஓடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT