அமராவதி,
ஆந்திரப் பிரதேச மாநிலம், மச்சிலிப்பட்டினம் கடற்கரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நிறுவப்பட்ட 63 அடி உயர பிரமாண்ட களிமண் மஹா கணபதி சிலை, சர்வதேச சாதனைப் புத்தகமான 'இன்டர்நேஷனல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'-ல் இடம்பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மச்சிலிப்பட்டினம் மங்கினபுடி கடற்கரையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 63 அடி உயர பிரமாண்ட களிமண் மஹா கணபதி சிலை நிறுவப்பட்டுள்ளது. இக்கடற்கரையில் நடைபெறும் 'சாகர தீர மகா கணபதி' வழிபாட்டின் மைய ஈர்ப்பாக இந்த சிலை அமைந்துள்ளது.
முழுக்க முழுக்க சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ரசாயனங்கள் இன்றி, கிருஷ்ணா மாவட்டம் முழுவதும் உள்ள 1 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட களிமண்ணைக் கொண்டு இந்த சிலை பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வரலாற்றிலேயே சமுத்திரக் கடற்கரையின் அருகில் இவ்வளவு பெரிய களிமண் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். இந்த கணபதி சிலை சர்வதேச சாதனைப் புத்தகமான 'இன்டர்நேஷனல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'-இல் இடம்பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்த 63 அடி கணபதியின் கரத்தில் 630 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட லட்டு பிரசாதமாக வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. செப்டம்பர் 14 முதல் தொடங்கி 11 நாட்கள் நடைபெறும் இந்த கடற்கரைத் திருவிழாவில், உலக சாதனைக்கான சான்றிதழை விழா அமைப்பாளர்கள் ஆந்திரப் பிரதேச மந்திரி கொல்லு ரவீந்திராவிடம் வழங்கினர். இந்த பிரமாண்ட சிலையைக் காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்து வருகின்றனர்.