மும்பை,
மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள தஹிபாலே குடும்பத்தில், சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்ததை அடுத்து, அக்குடும்பத்தினர் குழந்தையை தேரில் வைத்து பிரம்மாண்ட ஊர்வலமாக வீட்டிற்கு அழைத்து வந்து தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடினர். பெண் சிசுக்கொலை மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடுகள் நிலவும் இன்றைய சமூக சூழலில், இந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த தஹிபாலே குடும்பத்தில் கடந்த நான்கு தலைமுறைகளாக, அதாவது கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக ஆண் குழந்தைகள் மட்டுமே தொடர்ந்து பிறந்து வந்துள்ளனர். இக்குடும்பத்தில் ஒரு பெண் குழந்தையாவது பிறக்காதா என்று ஒட்டுமொத்த குடும்பமும் ஏங்கித் தவித்து வந்துள்ளது. இந்த நிலையில், தஹிபாலே தம்பதியினருக்கு சமீபத்தில் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனால் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்த அந்த குடும்பத்தினர், அக்குழந்தைக்கு 'கார்கி' என்று பெயரிட்டனர்.
குழந்தை பிறந்த பிறகு, தாயும் சேயும் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்புவதற்காக அக்குடும்பத்தினர் செய்த ஏற்பாடுகள் அப்பகுதி மக்களையே வியப்பில் ஆழ்த்தியது. கடந்த 31-ந்தேதி ஆஸ்பத்திரியின் வாசலில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை தேர் ஒன்று பிரேத்தியமாக தயாராக நிறுத்தப்பட்டிருந்தது.
குழந்தையும் தாயும் தேரில் ஏறியதும், மேளதாளங்கள் முழங்க, குடும்பத்தினரும் உறவினர்களும் சாலையெங்கும் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆஸ்பத்திரியில் இருந்து தங்களது வீடு வரை இந்த பிரம்மாண்ட ரத ஊர்வலம் தொடர்ந்தது. வழியெங்கும் அக்குழந்தையின் மீது மலர்களைத் தூவி மக்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை பேசுகையில், "எங்கள் குடும்பத்திற்கு 200 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ள மிகப்பெரிய சொத்து இந்த பெண் குழந்தை. பெண் குழந்தைகளைப் பாரமாக நினைக்கும் சமூகத்திற்கு மத்தியில், பெண் பிறப்பு என்பது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என்பதை உணர்த்தவே நாங்கள் இந்த ஊர்வலத்தை நடத்தினோம்" என்று பெருமிதத்துடன் கூறினார்.
தஹிபாலே குடும்பத்தின் இந்த வித்யாசமான மற்றும் அர்த்தமுள்ள கொண்டாட்டத்தின் காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பல தரப்பு மக்களும் இக்குடும்பத்தினருக்கு தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் குவித்து வருகின்றனர்.