தேசிய செய்திகள்

“வெறும் பதவி விலகலால் மட்டுமே ஒரு தேசம் கட்டமைக்கப்படுவதில்லை..” - சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்

இன்று நாம் கண்டது ஜனநாயகத்தின் வெற்றி என்று சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.

குருகிராம், [அரியானா],

நீட் தேர்வு முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவிவிலக வேண்டும் என்ற முழக்கத்தை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்தது. ந்த கோரிக்கையை முன்னிறுத்தி, கடந்த மாதம் (ஜூன்) 20-ந் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்தில் பங்கேற்ற லடாக்கை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.

பேரணி

இதற்கிடையே, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நாடாளுமன்றத்தை நோக்கி "சலோ சன்சாத்" என்ற பெயரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் பேரணியை முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து 20 ஆயிரம் பேர் டெல்லி ஜந்தர் மந்தரில் குவிந்தனர். 20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த சோனம் வாங்சுக்கை போலீசார் வலுக்காட்டாயமாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தர்மேந்திர பிரதான் ராஜினாமா

இந்த நிலையில், நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். தடையை மீறி பேரணி செல்ல முயன்றவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி கூட்டத்தை கலைத்தனர்

இந்த நிலையில், மத்திய மந்திரி ஜே.பி.நட்டா, போராட்டக்காரர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, 3 கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்தனர். நாடாளுமன்றத்திற்கு உள்ளே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அமளி, நாடாளுமன்றத்திற்கு வெளியே ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் என பா.ஜ.க. அரசு சிக்கித் தவித்தது. தற்போது, வேறு வழியில்லாமல் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். தர்மேந்திர பிரதான் பதவி விலகிய நிலையில் டெல்லி போராட்டக் களத்தில் இளைஞர்கள் கொண்டாடினர்.

போராட்டம் வாபஸ்

இந்நிலையில் 3ம் கட்ட பேச்சுவார்த்தையில் தங்களின் 3 முக்கிய கோரிக்கைகளையும் அரசு ஏற்பதாக உறுதி அளித்ததால் நாடு முழுவதும் நடைபெறும் மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. 4 வாரங்களில் மத்திய அரசுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெறும் பதவி விலகலால் மட்டுமே ஒரு தேசம் கட்டமைக்கப்படுவதில்லை என்று சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தின் வெற்றி

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-

அரசாங்கமும் தர்மேந்திர பிரதானும் எடுத்துள்ள முடிவுகளை நான் வரவேற்கிறேன் மற்றும் மதிக்கிறேன். அத்துடன் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நாம் கண்டது ஜனநாயகத்தின் வெற்றி. இந்த விவகாரத்தை முதலில் எழுப்பிய எங்கள் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருக்கும், அவர்களுக்கு ஆதரவளித்த தன்னார்வலர்களுக்கும், ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுத்த நாடு முழுவதிலுமிருந்து வந்த மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்களுக்கும் எனது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதவி விலகலால் மட்டுமே

அவர்கள் அனைவரையும் நான் மதிக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் அமைதியை கடைப்பிடித்த விதத்தை நான் மதிக்கிறேன். நாம் இந்த அமைதியை தொடர்ந்து கடைப்பிடிப்போம் என்றும், எதிர்காலத்தில் எங்கும் எந்தத் தவறும் நடக்காது என்றும் நம்புகிறேன். நாம் சீர்திருத்தங்களை நோக்கிப் பணியாற்ற வேண்டும்.

வெறும் பதவி விலகலால் மட்டுமே ஒரு தேசம் கட்டமைக்கப்படுவதில்லை. கல்வியில் சீர்திருத்தம் தேவை, அது குறித்து மேலும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்ட அதே பெருந்தன்மையுடன் சீர்திருத்த முயற்சிகளிலும் செயல்படும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

உண்மையின் பாதை

கல்வியில் மட்டுமல்லாமல், நிர்வாகத்திலும் சீர்திருத்தங்கள் தேவை. இனிவரும் காலங்களில் நாட்டை நிர்வகிக்கும் விதத்தில் மாற்றம் ஏற்படும் என்று நான் நம்புகிறேன். நாடு அச்சத்தின் அடிப்படையில் அல்லாமல் அன்பு மற்றும் பாசத்துடன் நிர்வகிக்கப்படும். அநீதியின் பாதையில் அல்லாமல் உண்மையின் பாதையில் வழிநடத்தப்படும்.

இவ்வாறு சோனம் வாங்சுக் கூறினார்.