கொச்சி
கேரள மாநிலம் கொச்சியில் சிறையில் இருந்து தப்பிய விசாரணைக் கைதி ஒருவர், தனது ஆதார் அட்டையை பெற்றுக்கொள்வதற்காக தான் ஏற்கனவே பிடிபட்ட போலீஸ் நிலையத்துக்கே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் தேமாஜி பகுதியை சேர்ந்தவர் மதுர்ஜ்யா சோனாவால் (வயது 28). கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் எடத்தலா பகுதியில் உள்ள பிளைவுட் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களின் செல்போன்களை திருடியதாக சோனாவால் கடந்த 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின் துணைச் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கபட்டார்.
அடுத்த நாள் மாலை 4 மணியளவில், வழக்கமாக கைதிகளுக்கு வழங்கப்பட்ட ஓய்வு நேரத்தை பயன்படுத்தி சமையலறையில் இருந்து சுற்றுச்சுவரில் ஏறி அவர் சிறையில் இருந்து தப்பியுள்ளார். கைதிகளை மீண்டும் அறைகளுக்குள் அடைப்பதற்கு முன்பு எண்ணிக்கை நடத்தியபோதுதான் சோனாவால் மாயமானது சிறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக அருகில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் தெரிவிக்கப்பட்டு, அவரை தேடி வந்துள்ளனர்.
தப்பி சென்ற சோனாவால் வேறு எங்கும் செல்லாமல் , அவரை கைது செய்த காவல் நிலையத்திற்கே சென்று அப்போது பணியில் இருந்த போலீஸ்காரரிடம் தனது ஆதார் அட்டையை கேட்டுள்ளார்.
தன்னை முன்பு பிடித்த போலீசார் பணியில் இருக்க மாட்டார்கள் என்றும், தன்னை யாரும் அடையாளம் காண முடியாது என்றும் அவர் நினைத்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் காவல் நிலையத்தில் இருந்த போலீஸ்காரருக்கும் அவரை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.
அப்போது, தப்பிய கைதியை பிடிப்பதற்காக வெளியிடப்பட்ட எச்சரிக்கை தகவலை பார்த்திருந்த மற்றொரு போலீஸ்காரர், சோனாவாலை அடையாளம் கண்டார். இதை உணர்ந்ததும் அதிர்ச்சியடைந்த சோனோவால், போலீஸ் நிலையத்தில் இருந்து மீண்டும் தப்பி ஓடியுள்ளார்.
இதையடுத்து, தப்பிய கைதியை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சிறையில் இருந்து தப்பிய பின்னரும் தனது ஆதார் அட்டையை பெறுவதற்காக போலீஸ் நிலையத்துக்கே வந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.