பெங்களூரு,
கர்நாடக மாநிலம் துமகூரு (மாவட்டம்) டவுன் கால் டெக்ஸ் சர்க்கிளில் விஸ் வாஷ் ஜூவல்லரி என்ற பெயரில் ஒரு நகைக்கடை உள்ளது. சம்பவத்தன்று காலையில் வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரத்துக்காக உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வந்தனர். எப்போதும் கடையை திறந்ததும் நகைகள் அனைத்தும் சரியாக உள்ளதா? என உரிமையாளர், ஊழியர்கள் சரிபார்ப்பது வழக்கம்.
அதுபோல், சரிபார்த்த போது கடையில் வாடிக்கையாளர்களுக்கு தெரியும் விதமாக கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த 10 வைர மோதிரங்கள், 2 தங்க சங்கிலிகள் காணாமல் போய் இருப்பதை கண்டு உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். நகைக்கடையின் இரும்பு கதவும் உடைக்கப்படாமல் இருந்தது. அதே வேளையில் நகைக்கடை சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்து மர்மநபர்கள் நகைகளை திருடி சென்றதற்கான எந்த அடையாளமும் இல்லை.
அப்படி இருந்தும் ரூ.10 லட்சம் மதிப்பிலான 10 வைர மோதிரங்கள், 2 தங்க சங்கிலி கள் மர்மமான முறையில் திருட்டுப்போனதால் உரிமையாளர் செய்வது அறியாமல் திகைத்தார். இதையடுத்து, துமகூரு டவுன் போலீசில் புகார் அளிக்கவும் உரிமையாளர் தயாரானார்.
அதே நேரத்தில் கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் யாரும் கைவரிசை காட்டினார்களா? என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது. இதையடுத்து, போலீசில் புகார் அளிக்கும் முன்பாக நகைகள் எப்படி திருட்டுப்போனது என்பதை பார்க்க, கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை உரிமையாளர் ஆய்வு செய்தார். அப்போது உரிமையாளருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது கடையில் இருந்த நகைகளை எந்தவொரு திருடர்களோ அல்லது ஊழியர்களோ திருடி செல்லவில்லை. ஒரு கில்லாடி எலி தான் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. நகைக்கடைக்குள் ஒரு எலி இரவில் சுற்றி திரிந்தது. அந்த எலி தான், வியாபாரத்துக்காக வைக்கப்பட்டு இருந்த மோதிரங்கள், தங்க சங்கிலியை ஒவ்வொன்றாக வாயில் கவ்வி எடுத்து செல்லும் காட்சிகள் கேமராவில் பதிவாகி இருந்தது.
இதையடுத்து, அந்த நகைகளை எலி எங்கே கொண்டு சென்று வைத்தது?, எலி எங்கு தங்கி இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ஆசாரியை அழைத்து வந்து நகைக்கடையில் மரப்பலகையால் அமைக்கப்பட்ட அலமாரிகள் திறந்து பரிசோதித்து பார்க்கப்பட்டது. அப்போது ஒரு மரப்பலகை பின்னால் இருந்த வலையில் (துளையில்) காணாமல் போன தங்க நகைகள் இருப்பதைகண்டு உரிமையாளர் நிம்மதி அடைந்தார்.
நகைக்கு மேல் ஒட்டி இருந்த விலை பட்டியலை மட்டுமே எலி தின்று இருந்தது. மோதிரங்கள், தங்க சங்கிலியை விழுங்காமல் பத்திரமாக எலி பதுக்கி வைத்திருந்தது. எலி திருடி சென்ற நகைகளை சுமார் 13 மணிநேரம் போராடி உரிமையா ளர் மீட்டு இருந்தார். நகைகளை எலி திருடி செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ரூ.10 லட்சம் நகைகள் கிடைத்தாலும், இதற்கு காரணமான அந்த கில்லாடி எலி மட்டும் எங்களிடம் இன்னும் சிக்கவில்லை. அதனை தேடிவருகிறோம். இனி எச்சரிக்கையாக இருப்போம் என்று கடை உரிமையாளர் தெரிவித்தார்.
தமிழில் நடிகர் முரளி நடிப்பில் வெளியான சுந்தரா டிராவல்ஸ் படத்தில் எலி நடிகர் வடிவேலுவின் பாஸ்போர்ட்டை கடித்து தின்றுவிடும், இதனால் அந்த எலியை பிடிக்க அவர் நூதன முறைகளை கடைப்பிடித்தும் அந்த எலி சிக்காமல் தப்பிவிடும். அதே பாணியில் நகைக்கடையில் திருட்டுப்போன நகை சிக்கிவிட்டது. இன்னும் அந்த கில்லாடி எலி சிக்காமல் இருப்பது ருசிகர விவாதமாகி உள்ளது.