தேசிய செய்திகள்

மதம் பிடித்த யானை தாக்கி பாகன் படுகாயம்

சிவமொக்கா அருகே சக்கரேபைலு முகாமில் யானை ஒன்று மதம் பிடித்து வாழப்பழம் கொடுக்க வந்த பாகனை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

சிவமொக்கா:-

யானை மதம் பிடித்தது

சிவமொக்காவை அடுத்த சக்கரேபைலுவில் யானைகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைகள் கவனிப்பதற்கு பாகன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பாகன்களில் ஒருவர் சவடப்பா. இவர் யானைகளுக்கு உணவு கொடுப்பது, நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது, குளிப்பாட்டுவது போன்ற பணிகளை செய்து வந்தார்.அதன்படி நேற்று காலை வழக்கம்போல முகாமில் இருந்த யானை ஒன்றிற்கு காலை உணவாக வாழைப்பழம் வழங்கினார்.அப்போது எதிர்பாராதவிதமாக அந்த யானைக்கு மதம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதில் யானை கோபமடைந்து, வாழைப்பழம் வழங்கிய பாகன், சவடப்பாவை துப்பிக்கையால் மடக்கி பிடித்தது.

பின்னர் அவரை அங்கிருந்து தூக்கி வீசய யானை, சங்கிலிகளை முறிக்க முயற்சித்தது. இதை பார்த்து சக பாகன்கள் ஓடி வந்து, சவடப்பாவை மீட்டனர். பின்னர் யானையை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

யானைக்கு சிகிச்சை

இருப்பினும் அந்த யானை அடம்பிடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கால்நடை டாக்டர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து உரிய சிகிச்சை அளித்த பின்னர் யானை இயல்பு நிலைக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. இருப்பினும் மேலும் சில நாட்களுக்கு அந்த யானையின் அருகே யாரும் செல்லவேண்டாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் காயமடைந்த பாகன் சவடப்பாவிற்கு சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மதம் பிடித்த யானைக்கு கால்நடை டாக்டர்கள் மூலம் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் சக்கரேபைலு யானைகள் முகாமில் பரபரப்பு ஏற்பட்டது.

.........

SCROLL FOR NEXT