விஜயதாஸ் 
தேசிய செய்திகள்

3 பவுன் நகையை பறிக்க முயன்ற கொள்ளையன்; மூதாட்டி செய்த அதிர்ச்சி வைத்தியம்

மூதாட்டி பிரசன்னகுமாரி, உடனடியாக சுதாரித்துக்கொண்டு கொள்ளையன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளை தனது காலால் ஓங்கி எட்டி உதைத்தார்.

திருவனந்தபுரம்,

கன்னியாகுமரி - கேரள எல்லையான பாறசாலை அருகே, தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்ப முயன்ற கொள்ளையனை 61 வயது மூதாட்டி துணிச்சலாக எட்டி உதைத்து பிடித்துக் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?

குமரி - கேரள எல்லையோர பகுதியான பாறசாலை அடுத்த பரசு வைக்கல் பகுதியை சேர்ந்தவர் பிரசன்னகுமாரி (வயது 61). இவர் அப்பகுதியில் உள்ள கால்வாய் கரை சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

தங்க சங்கிலி

அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், சாலையோரம் நின்றபடி செல்போனில் பேசுவது போல் நோட்டமிட்டு கொண்டிருந்தார். பிரசன்னகுமாரி அருகே வந்ததும், கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை அந்த மர்ம நபர் பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்ப முயன்றார்.

மூதாட்டியின் துணிச்சல் செயல்

இதனால் சற்றும் பதற்றமடையாத மூதாட்டி பிரசன்னகுமாரி, உடனடியாக சுதாரித்துக்கொண்டு கொள்ளையன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளை தனது காலால் ஓங்கி எட்டி உதைத்தார். மூதாட்டியின் இந்த அதிரடி தாக்குதலால் நிலைதடுமாறிய கொள்ளையன், மோட்டார் சைக்கிளுடன் சாலையோர பள்ளத்தில் விழுந்தார்.

மடக்கி பிடித்த பொதுமக்கள்

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து, பள்ளத்தில் விழுந்து கிடந்த கொள்ளையனை சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர், அவனை பாறசாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கொள்ளையன் கைது

பிடிபட்ட நபரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ஆறையூர் சாவல்லூர் பொட்டா பகுதியை சேர்ந்த விஜயதாஸ் (40) என்பது தெரியவந்தது. அவனிடமிருந்து பறிக்கப்பட்ட 3 பவுன் தங்க நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாறசாலை போலீசார் விஜயதாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT