சக்க கொம்பன் யானை 
தேசிய செய்திகள்

மூணாறு அருகே குடியிருப்புக்குள் புகுந்த ‘சக்க கொம்பன் யானை’: பலாப்பழங்களை ருசித்ததால் பரபரப்பு

குடியிருப்பு மற்றும் தோட்டப் பகுதிகளுக்குள் நுழையும் இந்த யானை, அங்கிருக்கும் பலா மரங்களைத் தேடிப் பிடித்து பழங்களைப் பறித்து உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் சின்னக்கானல் குடியிருப்புப் பகுதிக்குள் 'சக்க கொம்பன்' என்ற காட்டு யானை புகுந்துபலாப்பழங்களைப் பறித்துச் சாப்பிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியிருப்புக்குள் நுழைந்த சக்க கொம்பன்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகில் சின்னக்கானல் குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளது. இந்த குடியிருப்புப் பகுதி மற்றும் சாலைப்பகுதிகளில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கடந்த 18-ம் தேதி 'சக்க கொம்பன்' காட்டு யானை உலவத் தொடங்கியது. யானையின் நடமாட்டத்தைக் கண்ட பொதுமக்கள் அச்சமடைந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

‘சக்க கொம்பன்’ பெயர்க்காரணம்

குடியிருப்பு மற்றும் தோட்டப் பகுதிகளுக்குள் நுழையும் இந்த யானை, அங்கிருக்கும் பலா மரங்களைத் தேடிப் பிடித்து பழங்களைப் பறித்து உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. மலையாளத்தில் பலாப்பழத்தை 'சக்க' என்றும், தந்தம் கொண்ட ஆண் யானையை 'கொம்பன்' என்றும் அழைப்பதால், உள்ளூர் மக்கள் இதற்கு 'சக்க கொம்பன்' எனப் பெயரிட்டுள்ளனர். இந்த யானை பலா மரத்திலிருந்து பழத்தைப் பறித்துச் சாப்பிடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

வனத்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பலாப்பழங்களின் வாசனையைத் தேடி யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவதைத் தடுக்க, மக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலுள்ள மரங்களில் பழுக்கும் பலாப்பழங்களை முன்னதாகவே பறித்துச் சேகரிக்கும் திட்டத்தைக் கேரள வனத்துறை கடந்த 16-ம் தேதி அறிவித்திருந்தது. இருப்பினும், யானை மீண்டும் ஊருக்குள் புகுந்துள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT