கல்லெறி திருவிழா 
தேசிய செய்திகள்

400 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கல்லெறி திருவிழா

விழாவையொட்டி தாமி அரச குடும்பத்தினர் நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து ஊர்வலமாக மைதானத்திற்கு வந்தனர்.

சிம்லா,

இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லா அருகே உள்ள தாமி கிராமத்தில், தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான இன்று 400 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய 'பத்தர் கா கேல்' எனப்படும் கல்லெறி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தாமி பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இந்த விசித்திர திருவிழாவை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

கற்களை வீசி தாக்குதல்

கற்களை வீசி தாக்குதல் விழாவையொட்டி தாமி அரச குடும்பத்தினர் நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து ஊர்வலமாக மைதானத்திற்கு வந்தனர். இதையடுத்து, இரு பிரிவை சேர்ந்த கிராம மக்கள் எதிரெதிரே அணிவகுத்து நின்று ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசி தாக்கி கொண்டனர். சுமார் 25 நிமிடங்கள் நீடித்த இந்த பரபரப்பான நிகழ்வில், ஜமோகி பிரிவை சேர்ந்த மகேஷ் வர்மா என்பவரின் கன்னத்தில் கல் பட்டு ரத்தம் வடிந்தது.

பத்ரகாளி அம்மனுக்கு ரத்த திலகம்

காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தவுடன் மேளதாளங்கள் முழங்க கல்லெறிதல் சடங்கு உடனடியாக நிறுத்தப்பட்டது. காயமடைந்தவரின் ரத்த துளிகள் சேகரிக்கப்பட்டு, அங்குள்ள பத்ரகாளி அம்மனுக்கு திலகமாக இட்டு படைக்கப்பட்டது.

பத்ரகாளி அம்மனுக்கு நரபலி

முன்னொரு காலத்தில் பத்ரகாளி அம்மனுக்கு நரபலி கொடுக்கும் வழக்கம் இருந்ததாகவும், அதனை தடுத்து நிறுத்திய அப்போதைய அரசி, அதற்கு பதிலாக இந்த கல்லெறி சடங்கை தொடங்கி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

நம்பிக்கை

இந்த சடங்கை தவறாமல் நடத்துவதன் மூலம் தங்கள் பகுதிக்கு செழிப்பு கிடைக்கும் என்பதும், இயற்கை சீற்றங்கள் மற்றும் தொற்றுநோய்களில் இருந்து மக்கள் காக்கப்படுவார்கள் என்பதும் அப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

SCROLL FOR NEXT