தேசிய செய்திகள்

பழைய இன்ஜின் ஆயிலை தினமும் குடித்து வாழும் கூலி தொழிலாளி

ஓசூர் வந்த கூலி தொழிலாளி, பழைய இன்ஜின் ஆயிலை குடித்து, பொதுமக்களை ஆச்சரியப்படுத்தினார்.

ஓசூர்,

கர்நாடக மாநிலம், ஷிவமொக்காவை சேர்ந்தவர் குமார், 48. பெங்களூரு, ஜால ஹள்ளி கிராஸ் பகுதியில் தங்கி கூலிவேலை செய்கிறார். ஆண்டுதோறும் சபரிமலைக்கு, ஓசூர் வழியாக செல்வது வழக்கம். இவர், 22 ஆண்டுகளாக, மோட்டார் வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட பழைய இன்ஜின் ஆயிலை தினமும் குடித்து வருகிறார்.

இருமுடி கட்டி சபரிமலை செல்லும் இவர், நேற்று மாலை ஓசூர் வந்தார். ஓசூர் சப் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஒரு கடை யில் டீ குடித்தார். அதன் பின், தன் பாக்கெட்டில் இருந்த இன் ஜின் ஆயில் பாட்டிலை எடுத்து, பொதுமக்கள் முன்னிலையில், வேகமாக குடித்தார். இதைப் பார்த்து பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்.

இதுகுறித்து குமார் கூறுகையில், "தினமும், லிட்டர் கணக்கில் பழைய இன்ஜின் ஆயிலை குடிக்கிறேன். அதனால், என்னை ஆயில் குமார் என, அனைவரும் அழைக்கின்றனர். மெக்கானிக் கடைகளில் சென்று, பழைய இன்ஜின் ஆயிலை வாங்கி கொள்வேன். எப்போதாவது ஒரு முறை, டீ குடிப்பேன். மற்ற உணவுகளை சாப்பிட்டால், உடல் ஏற்றுக்கொள்ளாது என்பதால், உணவுகளை தவிர்த்து விடுகிறேன்,” என்றார்.