சிம்லா,
ரவி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய காட்டு ஆடு ஒன்று அசாத்திய தைரியத்துடன் நீந்தி எதிநீச்சல் போட்டு உயிர் தப்பியது.
இமாச்சல பிரதேசத்தின் மலைப்பாங்கான சம்பா மாவட்டத்தில் ரவி ஆறு அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால், ரவி ஆற்றில் தண்ணீர் போக்குவரத்து அதிகரித்தது. இதையடுத்து ரவி ஆற்றில் தண்ணீர் அசுர வேகத்தில் வெள்ளப்பெருக்குடன் பாய்ந்து கொண்டிருந்தது.
அப்போது, ஆற்றின் அருகே நின்றிருந்த ஒரு காட்டு ஆடு எதிர் கரையை அடைவதற்காக ஆற்று வெள்ளத்தின் தீவிரத்தை சில நொடிகள் தீவிரமாக கவனித்தது.
யாரும் எதிர்பாராத விதமாக, அந்த ஆடு ஆக்ரோஷமாக சுழன்றடித்த வெள்ளப்பெருக்கு தண்ணீரில் திடீரென குதித்தது. அப்போது நீரின் வேகம் மிக அதிகமாக இருந்தது. எனவே ஆடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் என்று அங்கிருந்தவர்கள் அஞ்சினர். ஆனால், அசுர நீரோட்டத்திற்கு சற்றும் அடிபணியாத அந்த ஆடு, தனது முழு பலத்தையும் திரட்டி ஆற்றின் அலைகளை எதிர்த்து அசாத்தியமாக எதிர்நீச்சல் போட்டு நீந்தத் தொடங்கியது.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, ஆற்றின் மறுபுறம் இருந்த ஒரு குறுகலான பாறைப் பகுதியை நோக்கி அது சாமர்த்தியமாக முன்னேறியது. ஆற்றின் அலைகள் தூக்கி வீசியபோதும், பாறையின் மீது தனது கால்களை வலுவாகப் பதித்து, அங்கிருந்து செங்குத்தான மலைப்பகுதியை நோக்கி துள்ளிக்குதித்து ஓடி பத்திரமாக உயிர் தப்பியது.
விலங்குகளின் அசாத்தியமான உயிர்வாழும் உள்ளுணர்வையும் இறுதிவரை கைவிடாத போராட்டக் குணத்தையும் விவரிக்கும் இந்த வீடியோவை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த வீடியோ இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இயற்கை சீற்றங்களுக்கு மத்தியிலும் ஒரு வனவிலங்கு காட்டிய இந்த அசாத்திய தைரியம் இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.