தேசிய செய்திகள்

பேண்ட் பாக்கெட்டில் பாம்பை வைத்து டீக்கடைக்கு வந்த தொழிலாளி வேறொருவருக்கு எடுத்து காண்பித்தபோது கடித்தது

விசாரணையில் அமிதுல் இஸ்லாம் மது போதையில் பாம்பை பேண்ட் பாக்கெட்டில் வைத்து கொண்டு வந்து விளையாடியது தெரிய வந்தது.

மலப்புரம்,

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அமிதுல் இஸ்லாம் (வயது 28). தொழிலாளி. இவர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். அவர், ஒரு பாம்பை தனது பேண்ட் பாக்கெட்டில் சுருட்டி வைத்துக் கொண்டு ஒதாயி பகுதியில் உள்ள டீக்க டைக்கு நடந்து சென்றார். பின்னர் அந்த கடையில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அமிதுல் இஸ்லாம் அருகே இருந்த ஒருவரிடம், தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த பாம்பை வெளியே எடுத்து காண்பித்தார்.

அந்த சமயத்தில் பாம்பு தொழிலாளியை பலமுறை கடித்தது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மஞ்சேரி அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த மலப்புரம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, தொழிலாளியை கடித்த விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சென்றனர்.

விசாரணையில் அமிதுல் இஸ்லாம் மது போதையில் பாம்பை பேண்ட் பாக்கெட்டில் வைத்து கொண்டு வந்ததும், அதை விளையாட்டு தனமாக எடுத்து காண்பித்தபோது அவரை கடித்ததும் தெரியவந்தது.