புதுச்சேரி,
பாகூர் குடியிருப்பு பாளையத்தை சேர்ந்தவர் கில்பர்ட் சைமன் ஜியான் (வயது 30). தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இவர், தாய் தந்தை இல்லாததால் தனது பாட்டி மரியாவின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவருடன் அலுவலகத்தில் வேலைப்பார்க்கும் பெண்ணின் சகோதரியுடன் கடந்த 24-ந்தேதி கேரளம் மாநிலத்தில் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்நிலையில் கில்பர்ட் தனது பாட்டியிடம் திருமணம் செய்வதற்கு ரூ.5 லட்சத்திற்கு மேல் செலவாகும். ஆனால் பணத்திற்கு என்ன செய்வது என்று புலம்பி கொண்டிருந்தார். மேலும் ஒருவேளை பணம் கிடைக்காவிட்டால் திருமணத்தை நிறுத்த வேண்டி வரும், அதனால் பிரச்சினை ஏதும் ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார். இதற்கு இடையே திருமணத்திற்கு பணம் கிடைக்காத மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய அவர் தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார். வெகுநேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த மரியா ஜன்னல் வழி யாக பார்த்தபோது கில்பர்ட் கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து அவரை மீட்டனர். ஆனால் அவர் இறந்தநிலையில் காணப்பட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த பாகூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மரியா கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணத்துக்கு பணம் இல்லாத விரக்தியில் நிச்சயதார்த்தம் நடந்தும் வாழ்க்கையை நிச்சயம் இல்லாமல் செய்து, மரணத்தை தழுவிய வாலிபரின் கதை, அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.