புதுச்சேரி,
நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'நானும் ரவுடிதான்' படத்தின் பாண்டியைப் போல ரவுடியாக நினைத்து செயல்பட்ட வாலிபருக்கு போலீசார் தக்க பாடம் புகட்டி உள்ளனர்.
புதுச்சேரி ஓதியஞ்சாலை போலீசார் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்டாக்டர் தோட்டம், கருமாரியம்மன் கோவில் அருகே ஒரு வாலிபர் கையில் 1½ அடி நீள கத்தியை வைத்து கொண்டு, அந்த வழியே சென்ற பொது மக்களை மிரட்டிக் கொண்டிருந்தார்.
ஏதோ பெரிய ரவுடி போல் பில்டப் கொடுத்துக் கொண்டிருந்தவர், தூரத்தில் போலீசை கண்டதும் சினிமா க்ளைமாக்ஸ் போல தப்பி ஓட முயன்றார். ஆனால் சுற்றி வளைத்த போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர் கண்டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரைச் சேர்ந்த சேர்ந்த பார்த்தசாரதி என்ற சாரதி (வயது 19) என்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் சொன்ன காரணத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
பெரிய ரவுடியாக வேண்டும். ஊரில் உள்ள அனைவருக்கும் என்னை பார்த்தால் பயம வேண்டும் வர என்பதற் காகத்தான் பொதுமக்களை கத்தியுடன் மிரட்டியதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'நானும் ரவுடிதான்' படத்தின் பாண்டியைப் போல ரவுடியாக நினைத்து செயல்பட்ட இந்த இளம் ரவுடிக்கு போலீசார் சினிமா பாணியில் இல்லாமல் நிஜமாகவே விலங்கு மாட்டி கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் பாணியில் வாலிபருக்கு பாடம் புகட்டினர். தற்போது அந்த 'ஆசை ரவுடி' கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். பெரிய ரவுடியாக வலம் வருவோம் என நினைத்து தாம் தப்பி செய்துவிட்டோம் என சக கைதிகளிடம் அவர் புலம்பி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.